திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றில் உடல் முழுவதும் 100 டி-சர்ட்டுகளை கட்டி மறைத்து எடுத்துச்சென்ற வட மாநிலக் கொள்ளையன் ஒருவன் கையும் களவுமாக சிக்கினான். நலிந்து வரும் பனியன் தொழிலுக்கு திருட்டு மூலம் வேட்டு வைக்கும் வட மாநில கொள்ளையர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
ஜல்லிக்கட்டு காளை படத்தில் ஆயில் மில் ஒன்றில் திருட்டு தனமாக பாட்டிலில் எண்ணெய் திருடிச்செல்லும் நகைச்சுவை நடிகர் செந்தில் கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும் காட்சி வெகுபிரபலம்... அதே போல பனியன் நிறுவனம் ஒன்றில் உடல் முழுவதும் டி.சர்ட்டுகளை கட்டி மறைத்து எடுத்துச்செல்ல முயன்று கையும் களவுமாக சிக்கியுள்ளான் வட மாநில பனியன் கொள்ளையன்..!
திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றில் பணிக்கு செல்லும் போது மெலிந்த தேகத்துடன் சென்ற வட மாநில இளைஞர் ஒருவர் பணி முடிந்து வெளியே செல்லும்போது காற்றடைத்த பலூன் போல உப்பிப்போய் வெளியேறினார்.
அவரை பார்த்து சந்தேகம் அடைந்த சூப்பர்வைசரும், காவலாளியும் அவரது மேல்சட்டையை கழற்றச் சொல்ல, ஆடைகளை கழற்றத் தயங்கினார்.
ஆடைக்குள் ஏராளமான டிசர்ட்டுகளை ஒன்றின் மீது ஒன்று போட்டு இருந்தது அந்த வட மாநில டாம் குரூஸ்..! அடிக்கு பயந்து நாகப்பாம்பு தோலை உரிப்பது போன்று ஒவ்வொன்றாக கழற்றிக் கொடுத்தார் அந்த திருடர் குல திலகம்..!
10 டி.சர்ட்கள் கழட்டப்பட்டபின் பலூன் போல உடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. அடுத்ததாக அவர்களது பார்வை உப்பிப்போயிருந்த பேண்டை நோக்கி திரும்ப, அதனையும் கழட்டினர். உள்ளே பண்டல் பண்டலாக டிசர்ட்டுகளை கட்டி பதுக்கி வைத்திருந்தார் அந்த ஸ்டைல் பாண்டி..!
ஒரு பண்டலில் 20 டி.சர்ட்டுகள் என சுமார் 5 கட்டு டி.சர்ட்டுகளை காலின் பல பகுதியிலும் கட்டி வைத்து மறைத்து ஊருக்கு கடத்திச்செல்ல முயன்றது வெளிச்சத்துக்கு வந்தது.
அவர் பண்டல் பண்டலாக டிசர்ட்டுகளை கழற்றிக் கொடுக்க பாதுகாப்பு பணியில் இருந்தவர் அதனை கண்டு அதிர்ந்து போயினர்.
மூன்றே நிமிடங்களில் உடைக்குள் மறைத்து வைத்திருந்த அத்தனை டி- சர்ட்டுகளையும் கைப்பற்றிய பனியன் நிறுவனத்தினர் அவரை சிறப்பாக கவனித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.
இதில் வட மாநில தொழிலாளர்களை மட்டும் குறைசொல்லி பலனில்லை. சம்பளம் குறைவு என்பதால் தங்கள் நிறுவனத்திற்கு பணிக்கு வருபவர்கள் யார்? அவர்களது குற்றப் பின்னணி என்ன? என்பதை எல்லாம் ஆராயாமல் சில பனியன் நிறுவனங்கள் இவரைப் போன்ற வட மாநில கொள்ளையர்களை வேலைக்கு சேர்த்து கொள்வது தான் அத்தனை பிரச்சனைகளுக்கும் மூலகாரணம் என்று கூறப்படுகின்றது.
திருடனைப் பணிக்கு அமர்த்தினால் உள்ளாடை மட்டுமல்ல விற்பனைக்கு உள்ள ஆடைகளையும் இழக்க வேண்டியது வரும் என்பதற்கு சாட்சியாக அரங்கேறி இருக்கின்றது இந்த திருட்டு சம்பவம்..!