கடலூர் மாவட்டம் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில், சொத்து தகராறு தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற ஆண் உதவி காவல் ஆய்வாளரை மிரட்டி விரட்டியதாக, பெண் காவல் ஆய்வாளர் மீது புகார் எழுந்துள்ளது.
யாருக்கு கொம்பு முளைத்திருக்கின்றது என்று கண்ணியமின்றி பேசிய போலீஸ் அதிகாரிகளின் வாய்சண்டை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பிரபு. இவரது மனைவி சசிகலா.
சொத்து தகராறு தொடர்பாக மாமியார் உள்ளிட்ட 4பேர் மீது உதவி ஆய்வாளரின் மனைவி சசிகலா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கும்படி உதவி காவல் ஆய்வாளர் பிரபு, செல்போன் மூலம் காவல் ஆய்வாளர் வனஜாவிடம் சிபாரிசு செய்ததாக கூறப்படுகின்றது.
அதற்கு, உதவி காவல் ஆய்வாளர் என்றால் கொம்பா முளைத்திருக்கிறது ? என்று மரியாதை இல்லாமல் பேசி அலட்சியப்படுத்தியுள்ளார் காவல் ஆய்வாளர் வனஜா. இதையடுத்து காவல் நிலையத்துக்கு நேரடியாக சென்ற உதவி காவல் ஆய்வாளர் பிரபு, செல்போனில் ஏன் மரியாதை இல்லாமல் பேசினீர்கள்? என்று நியாயம் கேட்டுள்ளார். அவ்வளவு தான் அடுத்த நொடியே காவல் ஆய்வாளர் வனஜா, சவுண்டு சரோஜாவானார்..!
புகாரை விசாரிக்க முடியாது என்று வரிந்து கட்டிய வனஜா, உதவி ஆய்வாளரை நோக்கி ஒருகட்டத்தில் வெளியே போய்யா என்று கையை நீட்டி மிரட்டியதோடு உதைவாங்கிட்டு ஓடாத என்றும், இவனை பிடிச்சி உட்காரவையுங்கள் என்றும் அட்டாக் கொடுத்து ஆவேச சந்திரமுகியானார்..!
மரியாதையாக பேசச்சொன்ன பாவத்துக்கு, அடுத்த நிமிடம், உதவி ஆய்வாளர் பிரபுவை பார்த்து அறைந்து விடுவதாகவும் பிச்சி விடுவதாகவும் தெறிக்க விட்டார் வனஜா..!. புகாரை விசாரிக்காவிட்டால் புகார் மனுவை திரும்ப கொடுங்கள் எஸ்.பி சாரை பார்க்கிறேன் என்றும் கவர்மெண்டில் சம்பளம் வாங்குறீங்கல்ல... இப்படி பேசாதீங்க.. என்றதற்கு ஏகவசனத்தில் பேசி காவல் துறைக்கு உள்ள கட்டுப்பாட்டை மீறி கண்ணியமின்றி நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் வனஜா கடுமையான வார்த்தைகளால் மிரட்டல் விடுத்தார்
ஒரு கட்டத்தில் உதவி ஆய்வாளர் பிரபுவை மிரட்டியே காவல் நிலையத்தை விட்டு விரட்டினார் வனஜா என்கின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்த சக காவலர்கள். வனஜா எடுத்த வீடியோவே அவரது அராஜக நடவடிக்கைக்கு சாட்சியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொது மக்களை கண்ணியத்துடன் நடத்தவேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தும் நிலையில், காவல் துறையில் உள்ள உதவி ஆய்வாளருக்கே இந்த நிலை என்றால் புகார் அளிக்க செல்லும் பொதுமக்களின் நிலை பரிதாபத்துக்குரியது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய விழுப்புரம் சரக போலீஸ் டிஐஜி சந்தோஷ்குமார், மகளிர் ஆய்வாளர் வனஜா மீது நடவடிக்கை எடுத்து அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.