நண்பன் சொன்ன காதல் கதைகளை நம்பி, ஒரு தலையாக காதலித்த பெண்ணை கடத்திவர சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு சேர் ஆட்டோவில் சென்ற நாடக காதல் கும்பலை சேர்ந்த கூட்டாளியை பிடித்து பொதுமக்கள் நையப்புடைத்தனர்.
மனம் கொத்திப்பறவை சினிமாவில் நாயகனின் ஒரு தலை காதலுக்கு உதவி செய்ய போன கூட்டாளிகளை பெண்ணின் உறவினர்கள் நையப்புடைப்பார்கள்..! இதே பாணியிலான ஒரு சம்பவம் நாமக்கல்லில் அரங்கேறி உள்ளது.
நாமக்கல் அடுத்த தூசூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளிக்கடையில் பணிபுரிந்துவருகிறார். இவர் வாரம் ஒருமுறை சேலம் அம்மா பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அங்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் பூவராகவன் என்ற ஷேர் ஆட்டோ ஓட்டுனர் அந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளான்.
2 முறை அந்த பெண்ணிடம் காதலை தெரிவித்த போதும், அந்த பெண் காதலிக்க மறுத்துள்ளார். இருந்தாலும் அந்தப்பெண் மீது கொண்ட ஒரு தலை காதலை நண்பர்களிடம் தெய்வீக காதல் போல கதை அளந்து விட்டுள்ளான் பூவராகவன்.
அந்த பெண்ணுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் அவள் இல்லையெனில் உயிரை விட்டு விடுவேன் என்று நண்பர்களிடம் கதறி அழுதுள்ளான் பூவராகவன். இதையடுத்து நண்பனின் காதலுக்கு உதவும் தமிழ் சினிமா நண்பர்கள் போல பெண்ணை கடத்திச்சென்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனர் சக ஆட்டோ பாய்ஸ்..!
சேலத்தில் இருந்து இரு தினங்கள் நாமக்கல் சென்று அந்த பெண் எப்போது, ஜவுளிக்கடைக்கு வருகின்றாள் என்பதை நோட்டமிட்டுள்ளனர். திங்கட்கிழமை காலையில் கடத்தல் திட்டத்தை அரங்கேற்ற சென்ற ஆட்டோ பாய்ஸ், கடைக்கு அருகே ஷேர் ஆட்டோவுடன் காத்திருந்துள்ளனர்.
அந்தப்பெண்ணின் காதலனை ஜவுளி எடுப்பது போல கடைக்குள் வேவுபார்க்க அனுப்பி உள்ளனர். அந்தப்பெண் வந்ததும் கையை பிடித்து இழுத்து ஆட்டோவில் ஏற்றியுள்ளனர். காதலன் கடைக்குள் இருந்து வருவதற்குள் அந்த பெண் காப்பாற்றச்சொல்லி கூக்குரலிட்டதால் அக்கம்பக்கத்தினர் திரண்டனர். இதனால் கடைக்குள் காத்திருந்த ஒரு தலை காதல் கிளி விட்டால் போதும் என்று சிட்டாக பறந்தது.
ஆட்டோவில் இருந்த கூட்டாளிகளில் ஒருவன் தப்பிச்செல்ல, பெண்ணை கையை பிடித்து இழுந்த அந்த ஒருவன் மட்டும் வசமாக சிக்கிக் கொண்டான்..! அவனை வளைத்து பிடித்து அடித்து நொறுக்கிய மக்கள் கை இரண்டையும் கயிற்றால் கட்டினர்.
இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பெண்ணின் சித்தப்பாவும் தன் பங்குக்கு கும்மாங்குத்து கொடுத்தார்..!
யார் பெற்ற பிள்ளையோ இப்படி சிக்கி சின்னாபின்னமாகிறது..! என்பது போல அடை மழையாய் அடிவாங்கியவர் அம்மாபேட்டை ஆட்டோ ஓட்டுனர் குமார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
கோயில் மணி போல போவோர் வருவோர் எல்லாம் அடித்துச்சென்றதால் அவரது அழகிய முகம், சுமார் மூஞ்சி குமார் போலானது..! பெண்ணின் சித்தப்பா, குமாரை பிடித்து நாமக்கல் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
அங்குள்ள காவல் துறையினர் பையனுக்கு அடி பலமாக இருக்கு அதனால் அவனை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து அழைத்து வாருங்கள், அப்போது தான் புகாரை பெற்றுக் கொள்வோம் என்று கறாராக கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.
இதனால் நையப்புடைத்த சித்தப்பாவே, நேசமணியாக மாறி... குமாரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டது. பெண்ணை கடத்த முயன்றவரை பிடித்தால், போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
அதை விடுத்து அடித்து உதைத்தது தவறு என்பதை சுட்டிக்காட்டிய போலீசார் சுமார் மூஞ்சி குமார் பக்கம் ஆதரவு கரம் நீட்டியதால், புகார் கொடுக்க சென்ற பெண்ணின் சித்தப்பா பெண்ணின் எதிர்காலம் கருதி புகார் வேண்டாம் என சென்றுவிட்டார்..!
நண்பன் காதலுக்கு உதவி செய்ய ஊரு விட்டு ஊரு வந்து...., ஊர் மக்களின் குலுக்கலில் விழுந்த பம்பர் பரிசால்..., கலங்கிய காதல் தூதுவன் குமார் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்..!
கவர்மெண்ட் பஸ்சும், காதலிக்கும் நண்பனும் ஒன்று தான்..! எப்ப என்ன நடக்கும் என்றே தெரியாது...! உயிர் நண்பரா இருந்தாலும் உஷாரா இருந்தால் தான் தப்பிக்க முடியும்..! என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!