கொரானா வைரசில் இருந்து பாதுகாக்க முக்கியமான முக கவசங்களுக்கு வியாபாரக் காரணங்களால் செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முக கவசங்கள் ஏற்றுமதியைத் தடை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வலுத்துள்ளது. சென்னை சவுகார்பேட்டையில் உள்ளது நயினியப்ப நாயக்கன் தெரு. மருத்துவ உபகரணங்களுக்கான முக்கிய விற்பனை மையமாக விளங்குவது இந்தப் பகுதி. கொரானா தாக்கத்தைத் தொடர்ந்து இந்த இடத்தின் தலையாய விற்பனைப் பொருளாகியிருப்பது முக கவசங்கள். மருத்துவமனைகள், நிறுவனங்கள் மட்டுமன்றி தனிப்பட்ட மக்களும் முக கவசங்கள் வாங்க இந்தப் பகுதிக்கு அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் தேவையை எதிர்கொள்ளும் அளவுக்கு உற்பத்தி நிறுவனங்களில் இருந்து வரத்து இல்லை என்றும், முக கவசங்களுக்கு லாப நோக்குடன் செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
2 அடுக்கு இழைகளைக் கொண்ட முக கவசங்கள், 3 அடுக்கு இழைகளைக் கொண்ட முக கவசஙகள் மற்றும் சற்று விலை அதிகமுள்ள என்.95 எனப்படும் அறுவை சிகிச்சைகளின் போது பயன்படுத்தப்படும் கப் வடிவிலான முக கவசங்கள் உள்ளிட்ட அனைத்து வகையுமே முன்பை விட தற்போது வெகுவாக விலை உயர்ந்துள்ளன.
தொடக்கத்தில் சீனாவில் மட்டுமே கொரானா வைரஸ் பரவிய நிலையில் பெருமளவிலான முக கவசங்கள் அங்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. தற்போதும், அதிக லாபத்தைக் கருத்தில் கொண்டு சீனா, தென்கொரியா, மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் முக கவசங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் தமிழக நலனைக் கருதி ஏற்றுமதிக்கு தடை விதிக்கவும் கோரிக்கை வலுத்துள்ளது.
இந்நிலையில் தேவையை எதிர்கொள்ளும் அளவுக்கு முக கவசங்களை தயாரிக்க மூலப் பொருள் பற்றாக்குறையும், மனித சக்தி பற்றாக்குறையும் நிலவுவதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.