சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கடந்த மாதம் சொகுசுப் பேருந்தில் இருந்து திருடிச் செல்லப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை மத்திய பிரதேசத்தில் வைத்து போலீசார் மீட்டுள்ளனர்.
தெலுங்கானாவைச் சேர்ந்த நகை வியாபாரியான கௌதம் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளோடு கோவை நோக்கி சொகுசுப் பேருந்து ஒன்றில் வந்துள்ளார்.
சங்ககிரி அருகே உணவு இடைவேளைக்காக பேருந்து நின்றபோது, பயணிகள் யாரும் இல்லாததைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் நகைகள் வைத்திருந்த பையை திருடிச் சென்றனர். இந்தக் காட்சிகள் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.
சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் என விசாரணை தீவிரமடைந்தது.
முடிவில் நகைகளைத் திருடியது மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முஸ்தபா, அக்தர், முனீர், அகமதுகான், அஜய்ரத்தோர் ஆகியோர்தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவர்களை கூட்டாக ஒரே இடத்தில் வைத்து மடக்க திட்டமிட்ட போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் மூலம் நகைகள் வாங்குவது போல் பேசி காளிபாவடி என்ற இடத்துக்கு வரவழைத்து அம்மாநில போலீசாரின் ஒத்துழைப்புடன் சுற்றிவளைத்தனர்.
அப்போது நகைகளை விட்டுவிட்டு தங்கள் பிடியில் இருந்து அவர்கள் 5 பேரும் தப்பியோடிவிட்டதாக போலீசார் கூறுகின்றனர். தொடர்ந்து அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.