மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிறந்து 20 நாட்களே ஆன மற்றொரு பெண் சிசு உயிரிழந்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள மீனாட்சிபட்டி கிராமத்தில் வைரமுருகன் - சௌமியா தம்பதிக்கு ஒரு மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி குழந்தை உயிரிழந்ததாக கூறி வீட்டின் அருகே புதைக்கப்பட்டது. போலீசார் சந்தேகத்தின் பேரில் சடலத்தை தோண்டி எடுத்து விசாரணை செய்ததில் எருக்கம் பால் கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்ததால் பெற்றோரை கைது செய்தனர்.
வறுமையில் வாடும் தங்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் பெண் பிறந்ததால் கொலை செய்ததாக வைர முருகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதற்கிடையே உசிலம்பட்டி அருகே கோவிலாங்குளத்தைச் சேர்ந்த பவித்ரா - ஜெயபாண்டி தம்பதியின் 20 நாள் பெண் குழந்தையும் மர்மமான முறையில் இறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த மாதம் 18ஆம் தேதி செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.
அப்போதிருந்து மூக்கில் இருந்து நீர் வடிந்து வந்ததாகவும், இன்று மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கூறி அதே மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலீசார் குழந்தையின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பெண் சிசு கொலை மீண்டும் தலை தூக்குவது வேதனையளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பெண்மையைப் போற்றும் தமிழக பண்பாட்டுக்கு பெண் சிசு கொலை அவமானம் என்றும், பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிகொன்று புதைத்திருப்பது பதற வைப்பதுடன், கண்டனத்திற்குரிய இந்தச் செயலில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.