சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையம் அருகே நாட்டுவெடிகுண்டு வீசப்பட்டது, பிரபல ரவுடிகள் இருவரைக் கொல்வதற்காக நடந்த முயற்சி என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகில் அண்ணாசாலையில் சென்ற ஒரு வாகனத்தின் மீது செவ்வாயன்று அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்ற வாகனத்தின் பதிவெண்ணைக் கொண்டு மகேஷ் என்பவனையும் அரசு கல்லூரி மாணவன் ஒருவனையும் பிடித்துக் காவல்துறையினர் விசாரித்தனர்.
அப்போது புழல் சிறையில் உள்ள புளியந்தோப்பைச் சேர்ந்த பிரபல ரவுடியின் திட்டப்படி இந்தக் கொலை முயற்சி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சிறையில் உள்ள ரவுடியின் கூட்டாளி, உயர் நீதிமன்றத்தில் இருந்து ஒரு சொகுசு காரைக் காட்டி அதைப் பின்தொடர்ந்து வருமாறு இருவரையும் கூறியதாகவும், அதன்படி அந்தக் காரைப் பின் தொடர்ந்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டுவெடிகுண்டு வீச்சில் தப்பியவர்களில் ஒருவன் தென்சென்னையைக் கலக்கும் ரவுடி என்றும், மற்றொரு ரவுடி வண்ணார்ப்பேட்டையைச் சேர்ந்தவன் என்றும் தெரியவந்துள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சுற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
இருவரும் அரசியல் பிரமுகர்களின் காரில் வலம் வருவதைக் கேள்விப்பட்டு, இவர்களுக்கு எதிரியான சிறையில் உள்ள ரவுடி தீர்த்துக் கட்டத் திட்டம் தீட்டியுள்ளான். வழக்கில் ஆஜராக இருவரும் உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்துள்ளனர்.
இவர்களுடன் கொரட்டூரைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவனும் காரில் இருந்துள்ளான். இதைத் தெரிந்து கொண்டு இந்த நாட்டு வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் இருந்து தப்பிய ரவுடிகள் இருவரும் ஆந்திர மாநிலத்தில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதால் அவர்களைப் பிடிக்கக் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.