பொறுமைக்கு பெயர் போனவைதான் ஆமைகள். 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து இப்பூமியில் வாழ்ந்து வருகிற ஒரு உயிரினம் என்றால் அது ஆமைகள். அவற்றின் பொறுமையான நடைக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய உயிர்சூழ்நிலை அமைந்து இருக்கிறது. நீருக்கும் நிலத்துக்கும் இடையே மிகப்பெரிய பாலமாக இருந்து பல உயிரிகள் வாழ்வதற்கு ஆமைகள் காரணாமாக இருக்கின்றன. நிலத்திற்கு வந்து முட்டையிடுவதன் மூலம் தன் ஆற்றலருந்து 70 சதவீதத்தை நிலத்துக்கு அளிக்கிறது. தனது மொத்த உடலை ஓடுகளுக்குள் மறைத்து வைத்து காட்டையும் கடலையும் காத்து வருகிறது.
அவை யாருக்கும் தீங்கு செய்வதில்லை மாறாக பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது. கடல் பகுதி அல்லது நன்னீர் பகுதிகளில் இறக்கும் மீன்களை சாப்பிட்டு விடுவதால் ஏரி, குளம், ஆறுகள், இன்னும் துர்நாற்றம் அடையாமல் இருக்கிறது. அதனால் இவற்றை கடலின் துப்பரவுவாளர்கள் என்பர். முட்டையிடுவதற்காக குழி தோண்டும் ஆமைகள் பல்வேறு வகையான பூச்சிகளுக்கு வாழ்வளிக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்னரே டைனோசர் காலத்தில் இருந்து வாழ்ந்து வருகிறது.
பூமியில் ஏற்பட்ட பல்வேறு சூழ்நிலை பேரழிவுகளாலும் இவ்வுயிரினம் அழியவில்லை. ஆனால் மனிதர்களால் ஆபத்து ஏற்பட்டு வருகிறது. ஆமைகளில் பல வகையுண்டு நிலத்து ஆமை, நன்னீர் ஆமை, கடல் ஆமை, உவர் ஆமை என பல்வேறு வகைகளாக பிரிக்கிறார்கள். நம் நாட்டில் 28 வகையான நன்னிர் மற்றும் கடல் ஆமைகள் உள்ளது. அதில் 17 வகை அழிந்து வரும் சர்வதேச உயிரின அழிவுப்பட்டியலில் இருக்கிறது. கடல் ஆமைகளிலே மிகச்சிறியது ஆலிவ் ரெட்லி ஆமைகள் ஆகும். இதய வடிவம் கொண்ட இந்த ஆமைகள் ஆலிவ் பச்சை நிறத்தில் இருப்பதால் இந்தப் பெயர் வந்தது.
பங்குனி மாதத்தில் தமிழகக் கடற்கரைகளுக்கு அதிகம் வருவதால், தமிழில் இவை பங்குனி ஆமைகள் எனப்படுகின்றன. துடுப்புகளை கொண்டு குழி தோண்டும் ஆமைகள் 70 முதல் 250 முட்டைகளை இட்ட பின்னர் மணலை தள்ளி மூடிவிட்டு கடலுக்குள் சென்றுவிடும். அடுத்த 45 நாட்களில் முட்டைகளிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் தங்களது வலசை பயணத்தை ஆரம்பிக்கிறது.
உலகிலேயே அதிகமான ஆமைகள் முட்டையிடும் மூன்று பகுதிகளில் ஒடிசாவின் காஹிர்மாதா கடற்கரையும் ஒன்று ஆகும். இந்த ஆமைகளில் வியத்தக தகவல் என்னவெனில் எந்த கடற்கரையில் பெண் ஆமைக்குஞ்சுகள் பிறந்ததோ அதே கடற்கரைக்கே வந்து முட்டைகளை இடுகிறது. பெருகி வரும் காலநிலை மாற்றம்,வெப்பம் போன்றவற்றால் அதன் மரபணுக்கள் வேறுபாடு அடைகிறது. பெண் ஆமைகளை விட ஆண் ஆமைகளே குறைவாக பிறப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்த முறை புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் இட்டுள்ள முட்டைகளை சேகரித்துள்ள வனத்துறையினர், அவை குஞ்சு பொறித்த பின் கடலில் விடப்படும் என தெரிவித்துள்ளனர். கடல் சூழ்நிலை சமன்பாட்டில் அதிகம் பங்கு பெறுபவை இந்த ஆமைகளே ஆகும். தடைசெய்யப்பட்ட மீன்வலைகள்,படகுகள் போன்றவற்றால் ஆமைகள் இறக்கிறது.
அது மட்டும் இல்லாமல் முட்டையிலிருந்து வரும் குஞ்சுகள் சூரிய ஒளியோ அல்லது நிலவின் ஒளியோ வைத்து தான் கடலுக்குள் செல்லும் ஆனால் நாம் பயன்படுத்தும் மின்விளக்குகளால் வலசைப்பாதை மறந்து தவித்து இறந்து விடுகிறது. மாலுமிகளுக்கே வழிக்காட்டிய ஆமைகள் வழி தெரியாமல் இருப்பதே இன்றைய நிலையாக இருக்கிறது.