சென்னை நீலாங்கரையில், கொள்ளை முயற்சியின்போது சாதுர்யமாக செயல்பட்ட அமெரிக்க பெண்ணின் சமயோசிதத்தால் அடுத்தடுத்து கொள்ளைகளை அரங்கேற்றி வந்த திருடர்கள் பிடிபட்டுள்ளனர்.
வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில் இணை இயக்குனராக பணியாற்றும் பாரதி, சென்னை நுங்கம்பாக்கத்தில் அலுவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். பாரதிக்கு பெசன்ட் நகரில் வீடு உள்ள நிலையில், அங்கு வசித்து வந்த அவரது பெற்றோர் கடந்த 14 ஆம் தேதி திருச்சி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
மறுநாள் காலை, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக பணிப்பெண் தெரிவித்துள்ளார். 2 லட்சரூபாய் மதிப்பிலான வைர தோடு, 40 சவரன் நகை, 2 கைகடிகாரங்கள், 35 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த திருட்டு சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து, நீலாங்கரை பகுதியில் அமெரிக்க தம்பதி கேரி ஸ்டூவர்ட்-டயானா வசித்த வீட்டில் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். வீட்டின் தரைதளத்தில் கேரி ஸ்டூவர்ட் இருந்ததால் அவரை தாக்கி கட்டிப்போட்டு விட்டு கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.
வீட்டின் முதல் தளத்தில் இருந்த டயானா, கொள்ளையர்கள் தன்னையும் தாக்க வருவதை அறிந்து, சாதுர்யமாக அறை ஒன்றுக்குள் சென்று பூட்டிக் கொண்டார். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை 100க்கு புகார் செய்துள்ளார். அருகில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சைரன் வாகனத்துடன் சென்றபோது, திருடர்கள் கொள்ளை அடிக்க முடியாமல் 2 இருசக்கர வாகனங்களை விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
திருடர்கள் விட்டுச் சென்ற இருசக்கர வாகனங்களை ஆய்வு செய்த போலீசார், பெசன்ட் நகரில் வருமான வரித்துறை அதிகாரி பாரதி வீட்டில் கைவரிசை காட்டியவர்களும் இதே கொள்ளையர்கள் என்பதை கண்டறிந்துள்ளனர். பாரதியின் பெற்றோர் வீட்டை பூட்டிவிட்டு திருச்சி செல்வதற்காக ஆட்டோவில் எழும்பூர் சென்றபோது, அவர்களை பின்தொடர்ந்து சென்ற இரு சக்கர வாகனங்கள் அவை என்பதை சிசிடிவி பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன் அடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வன்னி கருப்பு மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுரேந்தரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தங்க நகைகள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள சிவகங்கையை சேர்ந்த சுகுமார் மற்றும் முத்துபாண்டி ஆகியோரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள், தொடர் கொள்ளைச் சம்பவங்களை நிகழ்த்தி வந்தவர்கள் என்பதோடு, அவர்கள் மீது பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகளும் உள்ளன. சமயோசிதமாக செயல்பட்ட அமெரிக்க பெண்ணின் சாதுர்யம், தொடர் கொள்ளையர்களைப் பிடிக்க பேருதவியாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.