தேனி மாவட்ட வனத்துறையினரால் மலையேற்றத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள குரங்கணி வனப்பகுதிக்குள், சட்டவிரோதமாக கேரள வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற சுற்றுலாப் பயணிகள் 23 பேர் உயிரிழந்தனர். இதைதொடர்ந்து, அப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகளும் அங்கு செல்வதற்கு தடைவிதித்து, கடந்த 6-ம் தேதி தேனி மாவட்ட வனத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டது.
இந்த நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டம் சூரியநெல்லியில் இருந்து, தமிழக எல்லையான கொழுக்குமலை வழியாக குரங்கணி வனப்பகுதிகளான திப்பட்டாமலை, மீசைப்புலி மலை, சிங்கப்பாறை போன்ற பகுதிகளுக்கு, கேரளா வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், கொழுக்குமலை சுற்றுலா எனும் பெயரில் கேரள டூரிசம் போர்ட் சுற்றுலா பயணிகளிடம் ஜீப் ஒன்றிற்கு இரண்டாயிரம் ரூபாய் கட்டணம் பெற்றுக்கொண்டு, சட்டவிரோதமாக அவர்களை சிங்கப்பாறை பகுதிக்கு அனுப்பி வருவாய் ஈட்டுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
அந்த வகையில் விடுமுறை தினமான நேற்று விடியற் காலையிலேயே, ஏராளமான இளைஞர்கள் மலைப்பகுதியில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள ஆபத்தை அறியாமல் மலைச்சரிவு பகுதிகளுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். சிலர் மதுபாட்டில்கள், சிகரெட் துண்டு மற்றும் அட்டைகள் போன்றவற்றோடு திண்பண்ட குப்பைகளையும் அங்கேயே வீசி சென்றுள்ளனர்.
இந்த பகுதிகளை கண்காணிக்க போடி சரக வனத்துறையினர் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியிருப்பது, கேரள வனத்துறைக்கு சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சிங்கப்பாறை முதல் குரங்கணி வரை தற்போது வறண்ட வானிலை நிலவுவதால், வனப்பகுதிகளில் போதை புற்கள் காய்ந்த நிலையில் எளிதில் தீ பற்றும் வகையில் உள்ளது.
எனவே தமிழக எல்லைபகுதியான கொழுக்குமலையில், தமிழக வனத்துறையினர் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பை தீவிரமாக்கி முறைப்படுத்தினால், விபத்துகள் தவிர்க்கப்படுவதடன் வருவாயும் அதிகரிக்கும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.