தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் பள்ளி மாணவி ஒருவர் ரப்பர் துணியால் கண்களை கட்டிக் கொண்டு கண்கள் திறந்திருப்பது போல அனைத்துப் பொருட்களையும் அடையாளப்படுத்துகிறார். நித்தியின் சக்தி என்று அளந்துவிட்ட சிஷ்யைகளுக்கு டஃப் கொடுக்கும் நம்ம ஊர் மாணவியின் அசாத்திய திறமை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அடுத்த சாகுபுரத்தில் உள்ள கமலாவதி பள்ளியில் 9 வது வகுப்பு படித்துவரும் பவித்ரா என்பவர் தான் தனது கண்களை ரப்பர் துணியால் மூடிக் கொண்டு உள்ளதை உள்ளபடியே அடையாளம் காட்டும் அதிசய மாணவி..!
ரூபாய் நோட்டுக்களையும், ஆதார் கார்டையும் தடவி பார்த்து அடையாளம் காட்டிய மாணவி பவித்ரா, புத்தகங்களில் என்ன பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது என்பதையும் சரளமாக சொல்லி மலைக்க வைக்கிறார்.
தனக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியைகளை ஒரு தொடுதலில் அடையாளம் கண்டு சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. ஆசிரியர் ஒருவரை தொடாமலேயே அவர் அணிந்திருக்கும் உடை, சட்டைப் பையில் வைத்திருக்கும் பேனாமூடியின் வண்ணம் வரை அப்படியே தெரிவித்து அனைவரையும் அசரவைத்தார் மாணவி பவித்ரா.
தனது இந்த அபூர்வ சக்திக்கு தான் சிறுவயது முதலே கற்றுவரும் யோகா கலை தான் முக்கிய காரணம் என்றும் ப்ரக்ந யோகாவை தினமும் 5-நிமிடம் செய்வதால் தான் கண்களை மூடிக்கொண்டிருக்கையில் நெற்றிக்கண் என சொல்லக்கூடிய ஞானக்கண் மூலம் முன்னால் இருக்கக்கூடிய அனைத்தையும் தன்னால் பார்க்க முடிவதாக கூறுகிறார்.
அதோடு ஒரு நபர் தன்னிடம் எந்த மாதிரியான மனோபாவத்துடன் அணுகுகிறார் என்பதையும் தன்னால் அறிந்துகொள்ள முடியும் என்று ஆச்சர்யப்படுத்தும் மாணவி பவித்ரா தற்போதுள்ள சமூகத்தில் பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள இந்த யோகாவினை கற்றுக்கொள்வது அவசியம் என தெரிவித்தார்.
இந்த மாணவி தனது கலையை பெண்களின் நன்மைக்கு பயன்படுத்தும் ஆவலில் இருக்க, இதே கலை தெரிந்த நித்தியின் சிஷ்யைகள் நிதி வசூலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த யோகா கலையை நன்கு கற்றுத்தேர்ந்த சிறுமிகளையும், பெண்களையும் பணம் கொடுத்து ஆசிரமத்திற்கு அழைத்துச்சென்ற நித்தி, தனது தவ வலிமையால் அவர்களின் 3 வது கண்ணை திறந்துவிட்டதாக கதை அளந்து வெளிநாட்டு பக்தர்களிடம் கோடிகளை வசூல் செய்த குற்றச்சாட்டுக்குள்ளானவர் என்பது குறிப்பிடதக்கது.