படித்து முடித்த பின் நல்ல வேலைக்கு செல்வதை விட தொழில் முனைவோராக வேண்டும் என்ற கனவு சிலருக்கு இருக்கும். அதனை ஊக்கப்படுத்தும் விதமாக, சுயதொழில் புரிவதன் அவசியம் பற்றி கல்லூரி மாணவிகள் அறிந்து கொள்ள நடத்தப்பட்ட நிகழ்ச்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
வங்கி மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற சுயதொழில் மேம்பாட்டு விற்பனைக் கண்காட்சி சென்னை எழும்பூரிலுள்ள எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்றது. அந்த கல்லூரி மாணவியர் மட்டுமல்லாது, சென்னை நகரில் உள்ள பிற கல்லூரிகளின் மாணவியர்களும் பங்கேற்று 150-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைத்து பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்தனர்.
குறிப்பாக கைவினைப் பொருட்கள், மெஹந்தி, நகபூச்சு கம்மல், வண்ண வளையல்கள் உள்ளிட்ட பலவகையான அணிகலன்கள், புடவை வகைகள் என 5 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலான பொருட்களை விற்பனை செய்யும் முயற்சியில் மாணவிகள் ஈடுபட்டனர்.
இவற்றோடு பானி பூரி, குளிர்பானங்கள், பழச்சாறு வகைகள், பலவகையான நொறுக்குத்தீனிகள் உள்ளிட்ட உணவு பண்டங்களை வெளியிலிருந்தும், தாங்களே தயாரித்தும் கொண்டுவந்து விற்பனைக்காக வைத்திருந்தனர்.
வரவு - செலவு முறை மற்றும் இலாப - நஷ்டம் குறித்து அறிந்துகொள்ளவும், விற்பனை செய்வதிலுள்ள நுணுக்கங்களை பற்றி அறிந்து கொள்ளவும் இந்நிகழ்ச்சி உதவியாக இருந்ததாக மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
படித்து முடித்துவிட்டு சுயத்தொழில் முனைவோராக மாணவிகள் மாற, இந்த நேரடி விற்பனை அனுபவம் நிச்சயம் எதிர்காலத்தில் கைகொடுக்கும் என ஆசிரியைகள் நம்பிக்கை தெரிவித்தனர்.