குரூப் 4 தேர்வு முறைக்கேட்டில் கைதான இடைத்தரகர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் ஆகிய இருவரை விஏஓ தேர்வு முறைகேடு உள்ளிட்ட மேலும் 2 வழக்குகளில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளில் இதுவரை 51 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் முக்கிய இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் ஆகிய இருவரும் குரூப்-2 ஏ மற்றும் விஏஓ தேர்வுகளிலும் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குரூப்-4 விவகாரத்தில் முதற்கட்டமாக இடைத்தரகர் ஜெயக்குமார் மற்றும் ஓம் காந்தனை காவலில் எடுத்து விசாரித்து முடித்திருந்த நிலையில், தற்போது குரூப் 2 ஏ மற்றும் விஏஓ தேர்வு முறைகேடு குறித்த 2 வழக்குகளிலும் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்குகளில் அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அனுமதிகோரி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனு மீது விசாரணை நடத்தி அனுமதி கிடைத்ததும், இருவரையும் குரூப்-4 முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை போன்று, குரூப்-2 ஏ மற்றும் விஏஓ தேர்வுகள் விவகாரத்திலும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த விசாரணையில் பல முக்கிய நபர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.