சென்னையில் பிரபல மருத்துவரின் வீட்டில் வேலை செய்து வந்த இரு பெண்கள், மருத்துவ தம்பதிக்கு உணவில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து வீட்டில் இருந்து 2 கிலோ தங்க நகைகளையும், 10 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னை எழும்பூர் காஜாமேஜர் சாலையில் உள்ள தனி வீட்டில் வசித்து வருபவர் பிரபல மருத்துவர் கோகுல்தாஸ்..! 84 வயதான இவர் தனது மனைவியுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார். இவரது மகன் கல்யாண்குமார், தனது மனைவி குழந்தைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அவர் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். கோகுல் தாஸ் தம்பதியினருக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு லோகநாயகி மற்றும் ஷாலினி ஆகிய இருவரையும் வேலைக்கு வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, வீட்டின் பீரோவில் வைத்திருந்த 6 லட்சம் ரூபாய் பணம் களவு போனது. இதையடுத்து பீரோவில் இருந்த குடும்ப நகைகளை சரிபார்த்த போது அதில் 2 கிலோவுக்கும் அதிகமாக மாயமாகி இருப்பதை கண்டு கல்யாண்குமார் அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக தந்தை கோகுல்தாஸிடம் விசாரித்த போது, தானும் தனது மனைவியும் பகலில் அயர்ந்து தூங்கி விடுவதால் வீட்டில் என்ன நடப்பது என்று தெரியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து கல்யாண்குமார் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சேத்துப்பட்டை சேர்ந்த வேலைக்கார பெண்மணிகளான லோகநாயகி, ஷாலினி ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்த போது பணம் மற்றும் நகைகள் கொள்ளைபோன பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.
கடந்த 16 வருடங்களாக கோகுல்தாஸ் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வந்த லோகநாயகி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தனது உறவுக்கார பெண்ணான ஷாலினி என்பவரை பணிக்கு சேர்த்துவிட்டுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோகுல்தாஸ் வீட்டு பீரோ சாவிக்கு கள்ளச்சாவி தயாரித்துள்ளார் லோக நாயகி.
அன்று முதல் கோகுல்தாசுக்கும் அவரது மனைவிக்கும் இரவு நேரத்தில் கொடுக்கப்பட வேண்டிய தூக்க மாத்திரையை பொடியாக்கி உணவில் கலந்து கொடுத்து, பகல் நேரத்தில் சாப்பிட வைத்துள்ளனர்.
உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் வயதான தம்பதிகள் இருவரும் அயர்ந்து தூங்குவதை சாதகாமாக்கிக் கொண்டு லோக நாயகி, கள்ளச்சாவி போட்டு பீரோவை திறந்து கொஞ்சம் கொஞ்சமாக தங்க நகையையும், தங்க கட்டிகளையும் திருடி ஆடைக்குள் மறைத்து எடுத்துச்சென்றுள்ளார். இதனை பார்த்த ஷாலினியும் அவரது பங்கிற்கு பீரோவில் இருந்து நகையை எடுத்துச்சென்றுள்ளார்.
கிலோ கணக்கில் தங்க நகைகளையும் தங்க கட்டிகளையும் வீட்டில் வைத்திருந்ததால் எத்தனை நகைகள் கொள்ளை போனது என்பதை கோகுல்தாஸ் குடும்பத்தினரால் கணக்கிட இயலவில்லை இதனை தங்களுக்கு சாதகாமாக்கிக் கொண்டு இரு பணிப்பெண்களும் இஷ்டத்துக்கு மடியில் கட்டிக் கொண்டு சென்றுள்ளனர். 10 லட்சம் ரூபாய் பணத்தையும் அள்ளிச்சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் 6 லட்சம் ரூபாயை மூன்று இரண்டாயிரம் ரூபாய் கட்டுக்களாக பீரோவில் வைத்து கல்யாணகுமார் பூட்டிச்சென்ற நிலையில் அதில் லோக நாயகி 2 கட்டுக்களையும் ஷாலினி ஒரு கட்டையையும் போட்டி போட்டு அபேஸ் செய்ததால் பொறியில் சிக்கிய எலியாய் இருவரும் மாட்டிக் கொண்டனர் என்று கூறப்படுகின்றது.
கொள்ளையடித்த நகைகளை விற்று அண்மையில் லோக நாயகி தனது மகளுக்கு பிரமாண்டமாய் திருமணம் செய்து வைத்துள்ளார். மாப்பிள்ளைக்கு ஸ்விப்ட் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். ஏ.சி. மெக்கானிக்காக இருந்த மாப்பிள்ளை திருமணத்திற்கு பின்னர் பைனான்சியராக மாறி பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.
ஷாலினி தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தி தன் பங்கிற்கு ஆடம்பரம் காட்டியுள்ளார். வீட்டு வேலைக்கு சென்ற இருவரும் குறுகிய காலத்தில் எப்படி செல்வந்தர்களானார்கள் என்று விபரம் தெரியாமல் ஏரியாவாசிகள் வியப்பில் ஆழ்ந்திருந்த நிலையில் தான், கொள்ளை வழக்கில் சிக்கி இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து தங்க ஆபரணங்கள், 8 தங்க கட்டிகள் உள்ளிட்ட ஒன்றே முக்கால் கிலோ தங்கத்தையும் 2 லட்சம் ரூபாய் பணத்தையும் கைப்பற்றி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கணக்கு வழக்கின்றி நகையையையோ பணத்தையோ வீட்டில் வைத்திருந்தால் அது நாமே புதிய திருடர்களை உருவாக்கும் வழியாகி விடும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த கொள்ளை சம்பவம் என்கின்றனர் காவல்துறையினர்.