ரெப்போ எனப்படும், வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் மாற்றமின்றி 5.15 சதவீதமாகவே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் செலாவணிக் கொள்கைக் குழுவில் உள்ள 6 பேரும் ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாக நீடிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நுகர்வோர் விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம், 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரியில் 7.35 சதவீதமாக உயர்ந்தது. இதையடுத்து பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கி முக்கியத்துவம் அளித்துள்ளதால், ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம், அதே நிலையில் நீடிப்பதால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் ஏதும் மாற்றம் இருக்காது.