இந்திய சந்தையில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்திவரும் சீன மொபைல் நிறுவனங்களின் விற்பனை சதவிகிதம் முதல் முறையாக சரிவைச் சந்தித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
ஹூவாய், சியோமி, ஓப்போ, விவோ, லெனோவா உள்ளிட்ட சீன மொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் சுமார் 80 சதவிகித சந்தையை ஆக்கிரமித்துள்ளன. அந்த நிலை இப்போது சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஷில்பி ஜைன். “ஜூன் மாதத்தில் இந்திய - சீன படையினருக்கு இடையே கால்வன் பள்ளத்தாக்கில் நடைபெற்ற கைகலப்பு காரணமாக சீன பொருள்களுக்கு எதிரான மனப்போக்கு மக்கள் மத்தியில் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து இந்திய அரசு 59 சீன நாட்டு செயலிகளைத் தடை விதித்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக, மொபைல் நிறுவனங்களால் அவற்றின் உற்பத்திப் பொருள்களை சரியான முறையில் சந்தைப்படுத்த முடியவில்லை. இந்த காரணங்களால் தான் சீன நாட்டு நிறுவனங்களின் போன் விற்பனையானது 9 சதவிகிதம் சந்தித்துள்ளது” என்று கூறியுள்ளார்
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்ட ஏப்ரல் மாதவாக்கில் 81 சதவிகிதமாக இருந்த சீன மொபைல் போன்களின் விற்பனையானது ஊரடங்கு தளர்த்தப்பட்ட ஜூன் மாதத்தில் 72 சதவிகிதமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.