ஏர் ஏசியா நிறுவன விமானிகள் பாதுகாப்பற்ற முறையில் விமானங்களை தரையிறக்குவதாக எழுந்த புகார் தொடர்பாக அந்நிறுவனத்துக்கு, விமான போக்குவரத்து பொது இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குறைந்த கட்டண விமானங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை ஏர் ஏசியா நிறுவனம் மீறுவதாக, அந்நிறுவனத்திலிருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்ட விமானி கேப்டன் கௌரவ் தனேஜா அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.
பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தான் நடத்திவரும் பிரபல யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட அவர், பாதுகாப்பான விமான இயக்கம் மற்றும் பயணிகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்ததே பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அது குறித்து விளக்கம் கேட்டு இரு வாரங்களுக்கு பின்னர், ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளுள் ஒருவருக்கு டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.