இந்தியாவில் மிகப்பெரிய அளவில், அதிகமாக விற்பனை செய்யப்படும் நுகர்வுப் பொருள்களைத் தயாரிக்கும் யுனிலிவர் நிறுவனம், தோலைப் பளபளக்கச் செய்யும் கிரீமான புகழ்பெற்ற ’ஃபேர் & லவ்லி’ பெயரை மாற்ற முடிவு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது. அதன்படி இனி ‘ஃபேர் & லவ்லி’ பிராண்ட் பெயரில் இனி ஃபேர் என்ற வார்த்தை இருக்காது. புது பெயரை விரைவில் வெளியிடுவோம் என்று யுனிலிவர் தெரிவித்துள்ளது.
அழகு என்றால் வெள்ளையாக இருப்பது போன்ற அர்த்தத்தை ஏற்படுத்தும் ஃபேர்/ஃபேர்னெஸ், வொய்ட்/வொயிட்டிங், லைட்/லைட்டனிங் ஆகிய வார்த்தைகளையும் இனி தயாரிப்புப் பொருள்களிலிருந்து நீக்க முடிவு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து யுனிலிவர் நிறுவனத்தின் பியூட்டி அண்டு பெர்சனல் கேர் பிரிவின் தலைவர் சன்னி ஜெயின், “அனைத்துவிதமான தோல் நிறங்கள் மற்றும் அழகின் பன்முகத்தன்மையைப் போற்றிக் கொண்டாடும் வகையில் உலகளாவிய எங்களது பார்வையை மாற்றியிருக்கிறோம். எங்கள் நிறுவனத்தின் வெளியீடுகளில் பயன்படுத்தும் ‘ஃபேர், வைட், லைட் ஆகிய சொற்கள் மூலம் வெள்ளையாக இருப்பது மட்டுமே அழகு என்பதை வலியுறுத்தி கூற விரும்பவில்லை’’ என தெரிவித்துள்ளார்.