நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாயம், மீன்பிடித்தொழில், கட்டுமானத் தொழில், சிறுதொழில்கள் உட்பட பல்வேறு தொழில்களுக்குத் தளர்வு இன்று தொடங்குகிறது.
இன்று முதல் பொருளாதார மீட்சி நடவடிக்கைக்காக பல்வேறு தொழில்களை இயங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று முதல் அது அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் பேருந்துகள், ரயில்கள், ஆட்டோ டாக்சிகள் ஓடாது.
திரையரங்குகள், மால்கள், ஜிம்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், திருவிழாக்கள், மத வழிபாடுகள், விளையாட்டு கலாசார நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தாலும் ஆன் லைன் வகுப்புகள் நடத்தலாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரனோ பாதிப்பு குறைவான பகுதிகளில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் உற்பத்திக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. குறைந்த நபர்களுடன் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூரியர், மின்பழுது பார்ப்பவர், பிளம்பர், தச்சர், சாலை கட்டுமானப் பணியாளர் போன்றவர்களுக்குப் பணி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி - நகராட்சி பகுதிகளில் கட்டுமான பணிகளை தொடர, நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, கட்டுமானம் நடைபெறும் இடங்களில் தற்போது தங்கி இருக்கும் தொழிலாளர்களை கொண்டு, தொடர்ந்து பணிகளில் ஈடுபடலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், வெளியூர்களில் இருந்து கட்டுமான தொழி லாளர்களை, கட்டுமானம் நடைபெறும் இடங்களுக்கு புதிதாக அழைத்து வரக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.
விவசாயத்தை மேம்படுத்த அதற்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. அறுவடை, பதப்படுத்துதல், பாதுகாத்தல், சந்தைப்படுத்துதல், மாநிலம் விட்டு மாநிலம் வேளாண் பொருட்கள் கொண்டு செல்வதற்கு அனுமதி, அத்தியாவசிய சரக்குகளை கொண்டு செல்லும் வாகனங்கள் போன்றவற்றிற்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.
ஐடி நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் பணிபுரியவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் செயல்படலாம்.
மீன்பிடித்தொழில், மீன் பொருட்கள், மீன் சந்தை போன்றவற்றுக்கான தடைகளும் தளர்த்தப்படுகின்றன. தேநீர், காபி, ரப்பர், முந்திரி போன்றவற்றின் பதப்படுத்துதல், பேக்கிங், விற்பனை போன்றவையும் இயங்கத் தொடங்கும்.
மீண்டும் தொழில்துறையை வளர்ச்சிப் பாதைக்குத் திருப்புவது மிகவும் கடினமான சவாலாக இருக்கும் என்று தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். ரயிலும் பேருந்தும் ஓடாத நிலையில் கூரியர் சேவையை எப்படி தொடர முடியும் என்று அத்துறையினர் கேள்வி எழுப்புகின்றனர்.
ஊரடங்கு காரணமாக தொழிலாளர்கள் கிடைக்காத நிலையையும் பல நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. தினக்கூலித் தொழிலாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே பணியாற்றலாம் என்றும் வேறு மாநிலங்களுக்குச் செல்ல அனுமதி இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டல்களின் படி மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தின் சூழலுக்கு ஏற்ப முடிவெடுத்து ஊரடங்கு தளர்வை அமல்படுத்தலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.