கொரோனா பரவல் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று தொடக்கத்தில் இருந்தே வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.
கொரோனா பரவலைத் தடுக்க ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் வணிகம் தொழில்துறைகள் முடங்கியுள்ளதால் பங்குச்சந்தைகளும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.
இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் ஆயிரத்து நூறு புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. பகல் பன்னிரண்டரை மணிக்கு சென்செக்ஸ் 877 புள்ளிகள் சரிந்து 28 ஆயிரத்து 938 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 228 புள்ளிகள் சரிந்து எட்டாயிரத்து 432 ஆக இருந்தது. வங்கிகள், நிதிநிறுவனங்கள், உலோகத் தொழில் நிறுவனங்களின் பங்குவிலை 8 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது.