கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் செயல்பட்டு வந்த பல்வேறு வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தி உள்ளன.
மாருதி சுஸுகி தங்கள் வாகனத் தயாரிப்பை ஞாயிற்றுக்கிழமை முதல் நிறுத்திக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. அரசின் கொள்கையைப் பொறுத்து தங்கள் பணி நிறுத்தக் காலம் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே ஒரு அலகில் தங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. தற்போது மேலும் இரு அலகில் வாகனத் தயாரிப்பை நிறுத்துவதாகக் குறிப்பிட்ள்ள அந்த நிறுவனம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்டிலேட்டர்கள் செய்யும் பணியைத் தொடர உள்ளதாக அதன் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
இதேபோல் மற்றொரு முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், கடந்த வெள்ளிக்கிழமை முதல் மகாராஷ்டிராவில் உள்ள தனது கார் தொழிற்சாலையின் செயல்பாட்டை விரைவாக குறைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதேபோன்று மெர்சிடஸ் பென்ஸ், ஃபியட் கிரைஸ்லர் மற்றும் போக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களின் வாகனத் தயாரிப்பை நிறுத்தியுள்ளன.