கொரோனா அச்சுறுத்தலால், 12 ஆண்டுகளில் இல்லாத வகையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஒரே நாளில் 2900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
கொரோனா எதிரொலியாக பெட்ரோலிய விலை வீழ்ச்சி, வெளிநாட்டவருக்கு விசா ரத்து, விமானப் போக்குவரத்து நிறுத்தம் உள்ளிட்ட விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இவையனைத்தும் உலக நாடுகளில் பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியப் பங்குச்சந்தைகளும் நேற்றைய வணிக நேரத் தொடக்கம் முதலே வீழ்ச்சியைக் கண்டன. பிற்பகலில் ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மூவாயிரத்து 204 புள்ளிகள் சரிந்தது. வணிகநேர முடிவில் சென்செக்ஸ் ஓரளவு மீட்சியடைந்து இரண்டாயிரத்து 919 புள்ளிகள் சரிந்து 32 ஆயிரத்து 778 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 825 புள்ளிகள் சரிந்து ஒன்பதாயிரத்து 633 ஆக இருந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு 11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.