கச்சா எண்ணெய் விலை குறைவு, கொரானா வைரஸ் பரவல் எதிரொலி ஆகியவற்றால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இரண்டாயிரத்து 400 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 14 டாலர் குறைந்து 31 டாலராக உள்ளது. ஒரே நாளில் எண்ணெய் விலை 31 விழுக்காடு வீழ்ச்சியடைந்ததால் உலக அளவில் பங்குச்சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே கொரோனா பரவல் எதிரொலியால் இரு வாரங்களாகத் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. பிற்பகல் ஒன்றரை மணி அளவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் இரண்டாயிரத்து 443 புள்ளிகள் வரை சரிந்து 35 ஆயிரத்து 132 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 648புள்ளிகள் வரை சரிந்து பத்தாயிரத்து 341 ஆக இருந்தது. ஓன்ஜிசி பங்குவிலை 11 விழுக்காடும், வேதாந்தா பங்கு விலை பத்து விழுக்காடும் வீழ்ச்சியடைந்தது. அதேநேரத்தில் பாரத் பெட்ரோலியம் பங்குவிலை பத்து விழுக்காடும், இந்தியன் ஆயில் நிறுவனப் பங்குவிலை 3 விழுக்காடும் உயர்ந்துள்ளது.