ஏர் இந்தியாவின் 100 சதவிகித பங்குகளையும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாங்கும் வகையில் விதிமாற்றம் செய்யப்படுவதாக தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் இதைத் தெரிவித்துள்ளார்.
இதுவரை நேரடி அன்னிய முதலீட்டுக் கொள்கையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய பங்குகளை 49 சதவிகிதம் என்ற அளவிற்கு வாங்க மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ஏர் இந்தியாவைப் பொறுத்த வரை அது நூறு சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே சமயம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் செய்யும் முதலீடு, உள்நாட்டு முதலீட்டாகவே கருதப்படுவதால், ஏர் இந்தியா விற்பனையில், விமான நிறுவனங்களுக்கான சர்வதேச விதிகள் ஏதும் மீறப்படாது என்றும் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்தார்.
சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவின் நூறு சதவிகித பங்குகளையும் தனியாருக்கு விற்க முடிவெடுத்துள்ள மத்திய அரசு அதற்கான விண்ணப்பங்களை மார்ச் 17 ஆம் தேதி வரை வரவேற்றுள்ளது.