60க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ள கொரானாவின் தாக்குதலால் கச்சா எண்ணெயின் தேவை பலமடங்கு குறைந்து அதன் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை தொடர்ந்து எக்ஸான் ((Exxon)), செவ்ரான் ((Chevron )) போன்ற பெரும் எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.
பல சிறிய எண்ணெய் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை துவக்கி உள்ளன. கொரானா தொற்று வேகமாக இருப்பதால், பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் எரிபொருள் தேவை வெகுவாக குறைந்து விட்டது. பல நிறுவனங்கள்,தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற சொல்வதால் தனிநபர் எரிபொருள் பயன்பாடும் குறைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மாத மத்தியில் பாதாளத்தை நோக்கிச் சென்ற எண்ணெய் விலை, சீனாவில் கொரானா தொற்று எண்ணிக்கை குறைந்ததாக வந்த தகவலை அடுத்து ஓரளவு உயர்ந்தது. ஆனால் நிலைமை இப்போது மாறி அமெரிக்க கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 44 புள்ளி 76 டாலராக குறைந்து விட்டது.
சர்வதேச தரம் வாய்ந்த பிரென்ட் கச்சா எண்ணையின் விலையும் 14 சதவிகிதம் குறைந்து பேரலுக்கு 50 புள்ளி 52 டாலராக உள்ளது.
இதனிடையே கச்சா எண்ணெய் தேவை குறைவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சவூதி அரேபியா, விலையை தக்க வைக்கும் நோக்கில், உற்பத்தியை குறைத்து வருகிறது. கொரானா எதிரொலியாக கச்சா எண்ணெயின் தேவை நாளொன்றுக்கு 4 லட்சம் பேரல்கள் வரை குறையும் என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி இப்படியே தொடர்ந்தால், பெட்ரோல்-டீசல் விலைகளும் பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரானா வைரசின் தாக்குதல் எத்தனை காலம் நீடிக்கும் என கணிக்க முடியாத நிலையில், அதன் தொற்று அதிகம் பரவும் நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்களாக இருப்பதால், இந்த துறை பெரும் சவாலை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.