புதிய Honda Activa 125 BS6 ஸ்கூட்டர்களை பெற்ற வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கண்ட ஸ்கூட்டர்களை திருப்பியழைப்பதாக ஹோண்டா கூறியுள்ளது.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Honda Activa 125 BS6 இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் Honda Activa 125 BS6 ஸ்கூட்டர்களில் உள்ள கூலிங் ஃபேன் கவர் மற்றும் ஆயில் கேஜ் ஆகியவற்றை வந்து மாற்றி கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு Honda நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
நன்றாக மூவிங்கில் உள்ள இந்த ஸ்கூட்டரில் வாடிக்கையாளர்கள் இதுவரை பெரிய அளவில் பிரச்சனைகள் என்று ஏதும் சொல்லாத நிலையில், Honda நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பு சற்றே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் செயல்திறன் மிக்க சேவையை அளிக்கும் வகையிலும், தயாரிப்பு தரத்தை மேம்படுத்தவும் Honda இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Honda Activa 125 BS6 வாடிக்கையாளர் இந்த பாகங்களை அருகிலுள்ள ஹோண்டா டீலர்ஷிப்பில் சரிபார்த்து கொள்ளலாம். அந்த பாகங்கள் மாற்றப்பட வேண்டிய தேவை இருந்தால் எந்த செலவும் இல்லாமல் இலவசமாக மாற்றி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Honda Activa 125 BS6 வாகனத்தை ஆய்வு செய்து பாகங்களை மாற்றி தர 30 நிமிடங்களே ஆகும் என தெரிவிக்கபட்டுள்ளது.
ஹோண்டாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாகன அடையாள எண்ணை கொடுத்து தங்களது ஸ்கூட்டருக்கு பாகங்களை மற்ற வேண்டுமா என்பதை வாடிக்கையாளர் உறுதிப்படுத்தி கொள்ளலாம்.