ஏர்டெல், வோடபோன் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
நிலுவைத் தொகையில் 50 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக செலுத்துமாறு வோடபோன் நிறுவனத்திற்கு தொலைத் தொடர்புத் துறை உத்தரவிட்டதால், தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா நிதியமைச்சர் மற்றும் தொலைத் தொடர்புத்துறை செயலாளரை சந்தித்து நிலைமையை எடுத்துரைத்தார்.
கடந்த 14 ஆண்டுக்கால சட்டரீதியான போராட்டத்திற்குப் பின்னர் அக்டோபர் 24ம் தேதி உச்சநீதிமன்றம் அரசுக்கு நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவிட்டது. இதையடுத்து வோடபோன் நிறுவனம் மூடக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையில் 2,500 கோடி ரூபாயை இந்நிறுவனம் இரு நாட்களுக்கு முன் செலுத்தியது. இதேபோன்று 35 ஆயிரத்து 586 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைத்திருக்கும் ஏர்டெல் நிறுவனமும் 10 ஆயிரம் கோடி ரூபாயை அரசுக்கு செலுத்தியுள்ளது.