வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் அதிகபட்சமாக 48 சதவிகிதமும், தேசிய பங்குசந்தையில் அதற்கு ஈடாகவும் உயர்ந்து வர்த்தகமானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அதன் சந்தை மூலதன மதிப்பு அதிகபட்ச அளவாக 12 ஆயிரத்து 902 கோடி ரூபாயாக உயர்ந்தது. செவ்வாய்கிழமை வரை 51 சதவிகித வீழ்ச்சியை சந்தித்த வோடபோன்-ஐடியா பங்குகளின் விலை ஒரேயடியாக அதிகரித்துள்ள நிலையில் இதற்கான காரணம் என்னவென்று பங்குச்சந்தை நிர்வாகங்கள் வோடபோனிடம் விளக்கம் கேட்டுள்ளன.
அலைக்கற்றை மற்றும் சேவை உரிமங்களுக்காக வோடபோன் நிறுவனம் 53 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு நிலுவை வைத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த திங்கள் அன்று 2 ஆயிரத்து 500 கோடி செலுத்திய வோடபோன், வார இறுதியில் மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலுத்துவதாக உறுதி அளித்துள்ளது.