2019ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தென்கொரியாவின் பாரசைட் திரைப்படம் வென்றது. இந்த படத்தை இயக்கிய போங் ஜூன் ஹோ சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கரை தட்டிச் சென்றார். சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜாக்குய்ன் பீனிக்சும் சிறந்த நடிகையாக ரெனி ஜெல்வெகரும் விருதுகளை வென்றனர்.
உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிசில் பிரமாண்டமாக நடைபெற்றது. வண்ணமிகு ஒளி அமைப்பு, கண்ணைக் கவரும் நடனம், மனதை மயக்கும் இசை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.
"ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்" திரைப்படத்தில் நடித்ததற்காக பிராட் பிட் சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டார். நடிப்பிற்காக பிராட் பிட் பெறும் முதல் ஆஸ்கர் விருது இதுவாகும்.
சிறந்த துணை நடிகைக்கான விருதை மேரேஜ் ஸ்டோரி படத்துக்காக லாரா டெர்ன் பெற்றுக்கொண்டார்.
சிறந்த அனிமேஷன் திரைப்படமாக டாய் ஸ்டோரி 4 தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது.
சிறந்த அனிமேஷன் குறும்படமாக ஹேர் லவ் தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த திரைக்கதைக்கான விருதை தென் கொரிய படமான பாரசைட் பெற்றுள்ளது. ஹாலிவுட் நடிகர் கியனு ரீவிசிடமிருந்து விருதை பாரசைட் படத்தின் திரைக்கதை எழுதிய இயக்குனர் போங்க் ஜோன் ஹோ பெற்றுக் கொண்டார். ஜோ ஜோ ராபிட் படமும் தழுவி எழுதப்பட்ட திரைக்கதை பிரிவில் விருது பெற்றது.
சிறந்த லைவ் ஆக்சன் குறும்படத்துக்கான விருது The neighbour's window படத்துக்கு வழங்கப்பட்டது.
சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது once upon a time in hollywood பெற்றது.
சிறந்த ஆடை வடிவமைப்பு விருதை லிட்டில் உமன் படத்திற்கு வழங்கப்பட்டது.
சிறந்த ஆவணத் திரைப்படமாக அமெரிக்கன் பாக்டரி தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை "லேர்னிங் டூ ஸ்கேட் போர்டு இன் ஏ வார் ஜோன் (இஃப் யு ஆர் ஏ கேர்ள்)" எனும் படம் தட்டிச் சென்றது.
சிறந்த ஒலித் தொகுப்புக்கான ஆஸ்கர் விருது "போர்ட் வெர்சஸ் பெராரி" படத்தில் பணியாற்றிய டொனால்ட் சில்வெஸ்டருக்கு கொடுக்கப்பட்டது.
சிறந்த படத்தொகுப்புக்கான விருது, ஏற்கனவே ஒலித் தொகுப்புக்கான விருதை வென்ற போர்ட் வெர்சஸ் பெராரி படமே வென்றது. படத் தொகுப்பாளர்கள் மைக்கேல் மெக்கஸ்கர் மற்றும் ஆன்ட்ரூ பக்லேண்ட் இணைந்து விருதை பெற்றுக் கொண்டனர்.
சிறந்த விசுவல் எபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருதை 1917 திரைப்பத்தில் பணியாற்றிய மூன்று பேர் இணைந்து பெற்றனர்.
முதல் உலகப்போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட 1917 திரைப்படத்தில் பணியாற்றிய மார்க் டெய்லர் மற்றும் ஸ்டூவர்ட் வில்சன் சிறந்த ஒலிக்கலவைக்கான ஆஸ்கரை தட்டிச் சென்றனர்.
சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதையும் 1917 திரைப்படமே தட்டிச் சென்றது. அப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரோஜர் டேக்கின்ஸ் ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டார்.
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருது பாம்ப்செல் படத்தில் பணியாற்றிய மூன்று பேருக்கு சேர்த்து வழங்கப்பட்டது.
சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதை பாரசைட் தட்டிச் சென்றது. ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் திறமையானவர்கள் என்று கூறி பணக்கார குடும்பத்திற்குள் சென்று அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து சிக்கலில் சிக்கிக் கொள்வதை நகைச்சுவையாகவும், த்ரில்லிங்காகவும் பாரசைட் படம் கூறுகிறது.