தமிழ் திரை உலகின் கந்துவட்டி பைனான்சியர் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான அன்பு செழியன் வீட்டில் இருந்து கணக்கில் வராத 77 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
தர்பார் படத்தின் விநியோகஸ்தர்களுக்கு பைனான்ஸ் வழங்கி நஷ்டகணக்கு காட்டியதால் வருமான வரிச்சோதனையில் சிக்கியதாக வெளியான தகவலின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
தமிழ் திரை உலகில் அதிக படங்களை தயாரிக்கும் லைக்கா முதல் சாதாரண தயாரிப்பாளர்கள் வரை அனைவருக்கும் அள்ள அள்ள குறையாமல் வட்டிக்கு பணம் அளிக்கும் பைனான்சியர் அன்புச்செழியன்..!
பிரபல தயாரிப்பாளர்களிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டு அடுத்த நொடியே 50 கோடி ரூபாய் வரை ரொக்கபணமாக அள்ளிக்கொடுக்கும் வல்லமை மிக்க அன்பு செழியனுக்கு எதிராக கடிதம் எழுதிவைத்துவிட்டு சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட போது கூட கந்து வட்டி புகார் மீது நடவடிக்கை பாயவில்லை..!
ஆனால் கடந்த 2 நாட்களாக தொடரும் வருமானவரிச் சோதனையில் அன்புச்செழியன் மற்றும் அவரது கூட்டாளி சரவணன் உள்ளிட்டோர் வீடுகளில் இருந்து இதுவரை 77 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டிருப்பது சாமானியர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், திரை உலகினர் இந்த தொகை குறைவு என்றே பேசிக் கொள்கின்றனர்.
கந்து வட்டி புகார்கள் வரிசை கட்டி நின்றாலும், அரசியல் செல்வாக்குடன் பைனான்ஸ் தொழிலை பந்தாவாக செய்து வந்த அன்புசெழியனின் பேராசை தான் அவரை வருமான வரித்துறையினரின் பிடியில் சிக்கவைத்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர் திரை உலகினர்.
பொங்கலுக்கு வெளியான ரஜினியின் தர்பார் படத்தை குறைந்த விலைக்கு கேட்டதால் அன்பு செழியனுக்கு பதில் பல்வேறு வினியோகஸ்தர்களுக்கு ஏரியாக்களை பிரித்து விற்றது லைக்கா நிறுவனம். தொடர் விடுமுறை என்பதால் படம் நல்ல வசூலை பெற்று திரையரங்கு உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் கோடிகளில் புரண்டனர்.
ஆனால் 21 நாட்களுக்கு பின்னர் தர்பார் படத்தால் தங்களுக்கு நஷ்டம் என கூறி 10 பேர் கொண்ட வினியோகஸ்தர்கள் திடீர் போர்க் கொடி உயர்த்தினர். ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டனர். முதலில் 25 கோடி கேட்டவர்கள் 65 கோடி ரூபாய் வரை கேட்டு மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியானது. இதன் பின்னணியில் வினியோகஸ்தர்களுக்கு வட்டிக்கு பணம் வழங்கிய பைனான்சியர் அன்பு செழியனின் தூண்டுதல் இருப்பதாக கூறப்பட்டது.
தர்பார் படத்தின் வசூல் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வந்த வருமானவரித்துறையினருக்கு, வரிஏய்ப்பு செய்வதற்காக இந்த நஷ்ட கணக்கு நாடகம் நடத்தப்படுகிறதா ? என்று சந்தேகம் எழுந்தது. மேலும் தீபாவளிக்கு வெளியாகி 300 கோடி ரூபாய் வசூலித்த படம் என்று டுவிட்டரில் டிரெண்டிங்கான பிகில் படத்தின் முக்கிய விநியோகஸ்தர் அன்பு செழியன் என்பதாலும் அவரது வீட்டில் சோதனை நடத்த திட்டமிட்டனர்.
முதலில் அன்பு செழியன் அலுவலகத்தில் விசாரணையை தொடங்கிய வருமான வரித்துறையினரிடம் ஏராளமான உறுதிபத்திர குறிப்புகள், சொத்துபத்திரங்கள், கையெழுத்திட்ட வெற்று பத்திரங்கள் ஏராளமாக சிக்கியது. வரவு செலவு கணக்கு எழுத பயன்படுத்தப்பட்ட டைரி ஒன்றும் சிக்கியது.
அதில் பிகில் படத்தின் புரொடக்சன் மேனேஜர் வெங்கட் மாணிக்கம் என்பவர் மூலம் நடிகர் விஜய்க்கு ரொக்கமாக 20 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாக குறித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்திலும், உரிமையாளர் கல்பாத்தி அகோரம் வீடுகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. அங்கு பிகில் படத்திற்கு என்று நடிகர் விஜய்க்கு வங்கி கணக்கில் 30 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மொத்தம் விஜய்யிடம் 50 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதா ? என்பதை அறிய விஜய்யின் வீட்டுக்கு சென்றுள்ளனர் அதிகாரிகள்.
அங்கு விஜய் இல்லை என்பதை அறிந்து நேரடியாக நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கே சென்று முறைப்படி சம்மன் வழங்கி அவரை விசாரணைக்காக வீட்டுக்கு அழைத்து வந்தனர். பைனான்சியர் அன்பு செழியன் கொடுத்த 20 கோடி ரூபாய் குறித்து தொடர்ந்து விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டது. விஜய்க்கு சொந்தமான இடங்களில் 24 மணி நேரத்திற்கு மேல் நீடித்த சோதனை இரவு நிறைவு பெற்றது.
மேலும் 20 கோடி ரூபாயை பெற்றுக் கொடுத்ததாக கூறப்படும் பிகில் படத்தின் தயாரிப்பு மேலாளர் வெங்கட்மாணிக்கம் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது
அண்மை காலமாக தமிழ்திரை உலகில் பிரபல நாயகர்களின் படங்கள் சரியாக போகவில்லை என்று நஷ்ட கணக்கு காட்டி மீண்டும் அதே நாயகர்களை வைத்து படம் தயாரித்து வசூல் பார்ப்பதை அன்பு செழியனிடம் பைனன்ஸ் பெறும் தயாரிப்பாளர்கள் சிலர் தொடர்ச்சியாக செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அன்பு செழியன் வட்டிக்கு கொடுப்பதில்லை என்று தன்னிடம் தெரிவித்ததாக இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் பாலிவுட் திரைஉலகம் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளிடம் சிக்கி அல்லோலப்பட்டது போல, தமிழ் திரைஉலகம் கந்து வட்டி பைனான்சியர் அன்பு செழியனின் ஆதரவாளர்களிடம் சிக்கி உள்ள நிலையில் இந்த அதிரடி சோதனையால் தர்பார் நஷ்டம் என்றவர்கள் ஓட்டமெடுத்துள்ளனர் என்கின்றனர் திரை உலகினர்.