என் தந்தை கமலுக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு, ஆனால் அரசியலில் அவருடன் இணைந்து செயல்படும் அளவிற்கு எனக்கு அரசியல் பற்றிய அறிவுக்கல்வி இல்லை என ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
சமீபத்தில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முறையான புரிதல் இல்லாத காரணத்தால் நான் அரசியலுக்கு வருவேன் என உறுதியாக கூற முடியாது என்றார். நான் பிறர் சாதனைகளை எப்போதும் ஒப்பிட்டு பார்ப்பதில்லை. என் சொந்த வழியில் நான் என்ன சாதிக்க விரும்புகிறேனோ அதை நோக்கியே பயணிப்பேன்.
அரசியலில் ரஜினி - கமல் இணைவார்களா, அவர்கள் இணைந்தால் அதை எப்படி பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்ருதி, எனது தந்தை பற்றி வேண்டுமானால் பேசுவது சரியாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் இருவரும் அரசியலில் இணைவது குறித்து கருத்து தெரிவிக்கும் அளவிற்கு, நான் சிறந்த அரசியல் பார்வையாளர் இல்லை. என் தந்தைக்கு சிறு வயதில் இருந்தே சமூக அக்கறையும், அரசியல் பார்வையும் உள்ளது. மேலும் நல்ல மனிதர்.
தற்போது நடிப்பு துறையில் இருந்து அவரது முழு பார்வையும் அரசியலுக்கு மாறியுள்ளது. தந்தை கமலின் இந்த செயல்பாடுகளை பார்ப்பதற்கு பெருமையாக, சந்தோசமாக உள்ளது. இது அவரின் மற்றொரு ரூபம். கமல் அரசியலில் உச்சத்தை தொடுவாரா என்ற கேள்விக்கு, நான் ஜோசியரோ அல்லது அரசியல் நிபுணரோ கிடையாது என குறிப்பிட்டார்.
மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்துளீர்களே அரசியலுக்கு வரும் யோசனையில் இருக்கிறீர்களா நிருபர் ஒருவர் கேட்க, நான் ஏற்கனவே செய்தியாளர்களை சந்தித்துள்ளேன், என் தந்தை தான் அரசியலுக்கு வந்துள்ளார் நான் இல்லை என பலமாக சிரித்து கொண்டே பேட்டியை முடித்து கொண்டார்.