சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள தர்பார் படத்தில் வில்லன் நடிகர் சுனில் ஷெட்டிக்கு குரல் கொடுத்ததன் மூலம், டப்பிங்கிலும் கால் பதித்துள்ளார் பிரபல வில்லன் நடிகர் ஆதித்யா மேனன்.
பில்லா, அறிந்தும் அறியாமலும் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தர்பார் திரைப்பட டப்பிங் அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஆதித்யா மேனன், ரஜினிகாந்துடன் படத்தில் ஒன்றாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், அவர் படத்தில் டப்பிங் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றார்.
இயக்குனர் முருகதாஸ் டப்பிங் பேச என்னை அழைத்த போது தயங்கினேன். ஆனால் அவர் டப்பிங் பேச கூப்பிடுவது ரஜினியின் படத்திற்கு என்று தெரிந்ததும் தாமதிக்காமல் ஒப்பு கொண்டேன் என்றார். நடிகர் அஜித்துடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி ஆதித்யா மேனனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு உற்சாகமாக பதிலளித்து பேசிய அவர், அஜித் ஒரு தொழில்நுட்ப பிரியர். அவருடன் இருக்கும் போது டெக்னாலாஜி குறித்து நிறைய அறிய முடிந்தது. மேலும் லேட்டஸ்ட் கேஜெட்டுகள் அனைத்துமே அவர் வசம் இருக்கும்.சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் தான் அஜித்தின் வீட்டை புதுப்பித்து கொடுத்தார்.
அவரிடம் பேசியபோது அஜித் தற்போது வசிக்கும் வீடு முழுவதுமே ஆட்டோமைஸ்டு செய்யப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார். அஜித் வீட்டில் உள்ள ஸ்க்ரீன்கள் பேசினால் திறக்கும். இது மாதிரி பல தொழிநுட்பங்களை, தன் வீடு முழுவதும் நிரப்பியுள்ளார் அஜித், என நடிகர் ஆதித்யா மேனன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பைக் மற்றும் கார் ரேஸர், பைலட் என பல வித்தைகளை கற்று ஒரு கலர்ஃபுல் கேரக்டராகவும், சகலகலா வல்லவராகவும் இருப்பதாக குறிப்பிட்டார்.
பல மொழிகளில் நடிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஆதித்யா, தமிழ், தெலுங்கு திரைப்பட துறையில் ஷூட்டிங் காலை உணவிற்கு பிறகே துவங்கும். ஆனால் கேரளாவில் காலை 5 மணிக்கே ஷூட்டிங் துவக்கி விடுவார்கள். 3 மணி நேரத்திற்கு பிறகே காலை உணவை பற்றி சிந்திக்க முடியும் என்றார்.