நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் ரசிகர்களின் பெருத்த ஆரவாரத்துக்கு இடையே இன்று அதிகாலை வெளியானது. தியேட்டர்கள் முன் நடனமாடியும், கேக் வெட்டியும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 167வது படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினியும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தர்பார் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் தர்பார் திரைப்படம் 7 ஆயிரம் திரையரங்குகளில் படம் இன்று வெளியானது. நள்ளிரவு முதலே திரையரங்குகள் முன்பாக திரளான ரசிகர்கள் காத்திருந்தனர்.
படம் திரையிடப்பட்டதும் பட்டாசுகளை வெடித்தும், நடனமாடியும் ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தனர்.
தர்பார் படத்தைப் பார்ப்பதற்காகவே ஜப்பானில் இருந்து வந்திருப்பதாக கூறிய ரஜினி ரசிகர் ஒருவர், ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை பேசி அசத்தினார்.
தர்பார் படம் வெளியான இந்தநாள் தான், தங்களுக்கு பொங்கல் பண்டிகை என ரசிகர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
சென்னை தர்பார் படம் வெளியான திரையரங்கில் பிரமாண்டமான பலூன் பறக்கவிடப்பட்டிருந்தது. படத்தைப் பார்ப்பதற்காக ரஜினி குடும்பத்தினர், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
நெல்லையில் தர்பார் படத்தை வரவேற்கும் விதமாகவும் படம் வெற்றியடையவும் பெண்கள் பானையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரஜினி ரசிகர்கள் தியேட்டர்கள் முன் விடிய விடியக் காத்திருந்தனர். படம் வெளியானதும் டிரம்செட் வாசித்தும், பொங்கலிட்டும், பட்டாசுகளை வெடித்தும் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று இன்றும், நாளையும் மற்றும் 13, 14-ஆம் தேதிகளிலும் சிறப்புக் காட்சியை திரையிட அனுமதி அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திண்டுக்கல் மாநகரில் மட்டும் தர்பார் திரைப்படம் வெளியாகாததால் ஏமாற்றமடைந்த ரஜினி ரசிகர்கள், திரையரங்குகளில் இருந்த பேனர்களை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்குள்ள 11 திரையரங்குகளிலும் தர்பார் திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில்,
விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே உடன்பாடு இறுதி செய்யப்படாததால் திரைப்படம் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது.
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தர்பார் படத்தின் சிறப்பு காட்சிகள் காலை 4 மணிக்கு வெளியானது. பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள், உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தர்பார் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களுக்கு, திருச்செங்கோடு நகர தலைமை ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம் மரக்கன்றுகளை வழங்கினார்.
சேலத்தில் ரசிகர் ஒருவர், ரஜினி போலவே உடையணிந்து தர்பார் படம் பார்க்க வந்தார். மேலும் ஜீப் மற்றும் காரிலும் ரஜினியின் புகைப்படங்களும், தர்பார் பட பாடல் வரிகளும் அச்சிடப்பட்டிருந்தன. தொடர்ந்து ரஜினியின் புகைப்படம் தாங்கிய பேனருக்கு மலர் தூவியும், கேக் வெட்டியும் ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
கரூரில் தர்பார் படம் வெற்றி பெற வேண்டி, ரஜினி ரசிகர் ஒருவர் அலகு குத்தி ஊர்வலமாக திரையரங்குக்கு வந்தார். தொடர்ந்து ரசிகர்கள் மேள தாளம் முழங்க நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Watch More ON : https://bit.ly/35lSHIO