மலையாள திரையுலகில் முன்னனி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி மீது பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தன் மீதான பொய் வழக்கை சட்டப்படி சந்திக்க இருப்பதாக நிவின்பாலி தெரிவித்துள்ளார்
பிரேமம் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்தவர் நிவின்பாலி, ஏற்கனவே தமிழில் நேரம் படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ராம் இயக்கத்தில் நடித்துள்ள “ஏழுமலை ஏழு கடல்” என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நிவின் பாலி மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
நடிகைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து மலையாள திரையுலகில் புயலை கிளப்பிய ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து கேரள போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நடிகரும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவுமான முகேஷ், நடிகர்கள் எடவெல பாபு, பாபுராஜ், ஜெயசூர்யா, சித்திக் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது பாலியல் அத்துமீறல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் நிவின்பாலிக்கு எதிராக பெண் ஒருவர் புகார் அளித்திருப்பதாகவும், அதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துபாயில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து சினிமா வாய்ப்பு தருவதாக ஆசைவார்த்தைக்குறி நிவின் பாலி தன்னிடம் அத்துமீறியதாக அவர் கூறியிருப்பதாக எர்ணாகுளம் போலீஸ் சூப்பிரண்டு வைவப் சக்சேனா தெரிவித்தார்
அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது முற்றிலும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ள நடிகர் நிவீன் பாலி, இது அடிப்படை ஆதாரமற்ற புகார் என்பதை தான் நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கை சட்டப்படி சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்