இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடந்த ஓராண்டாக மன அழுத்தத்துக்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், மீராவுக்கு மன அழுத்தம் எதுவும் இல்லை என்று அவரது பள்ளி ஆசிரியர்களும் சக மாணவிகளும் கூறியுள்ளார்.
தனது தந்தை தற்கொலை செய்து கொண்டதால் அதன் வலி என்ன என்பது தனக்குத் தெரியும் என்று 5 ஆண்டுகளுக்கு முன் கூறி இருந்தார் விஜய் ஆண்டனி. தற்போது தனது மகளால் அதே வலியை மீண்டும் உணர்ந்து கொண்டிருக்கிறார்.
விஜய் நடித்த சுக்கிரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயனானார். தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த ஃபாத்திமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வரும் விஜய் ஆண்டனிக்கு மீரா, லாரா என்ற இரு மகள்கள்.
சர்ச் பார்க் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வணிகவியல் படித்து வந்த மூத்த மகள் மீரா, இறகு பந்து போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகளை பெற்றவர். பள்ளியில் சமூக கலாசார நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு வந்தவர்.
திங்களன்று, இரவு உணவு அருந்திய பின் மீரா உறங்கச் செல்வதாகக் கூறி தனது அறைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
அதிகாலை 3 மணியளவில் மகளின் அறைக்கு சென்ற விஜய்ஆண்டனி, மீரா துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் இருப்பதை பார்த்து கத்தி கூச்சலிட்டுள்ளார்.
வீட்டிலிருந்த பணியாளர் உதவியுடன் மீராவை மீட்டு அருகில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்றனர். மீராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்ததை அடுத்து, கூராய்விற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பப்பட்டது.
விஜய் ஆண்டனியின் வீட்டிற்குச் சென்ற போலீசார் மீரா தற்கொலை செய்து கொண்ட அறையில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.
மீராவின் வீட்டிற்கு வந்திருந்த சர்ச் பார்க் பள்ளியின் முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். மீராவிற்கு பள்ளியில் ஏதும் பிரச்னை ஏற்பட்டிருந்ததா? பள்ளி வகுப்பில் சகஜமாக இருந்தாரா? என கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் மீரா கடந்த ஒராண்டு காலமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், மன அழுத்தத்திற்காக காவேரி மருத்துவமனையில் மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று வந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மீராவுக்கு மன அழுத்தம் எதுவும் இல்லை என்று அவரது ஆசிரியர்களும் நெருங்கிய தோழியும் கூறியுள்ளனர். மீரா கலகலப்பான பெண் எனவும், தான் செல்லமாக வளர்க்கும் நாயுடன் வாக்கிங் செல்வார் எனவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மீராவில் அறையில் இருந்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை கைப்பற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனது குடும்பம், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை மிஸ் செய்வதாக எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தின் இறுதியில் "குட் பை" என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் தற்கொலைக்கு முன் எழுதியதாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
எனினும், கடிதத்தை எழுதியது யார், எப்போது எழுதப்பட்டது என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.