ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன காக்கா - பருந்து கதை , நடிகர் விஜய்க்காக சொல்லப்படவில்லை என்றும் ஜெயிலர் படம் பார்த்துவிட்டு விஜய் தன்னை பாராட்டியதாகவும் ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார்
ஜெயிலர் படம் உலகெங்கும் ரசிகர்களின் வரவேற்புடன் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில் 3 வது நாள் விடுமுறை தினம் என்பதால் பாக்ஸ் ஆபீஸில் ஜெயிலர் வசூலை வாரிக்குவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக ஆந்திராவில் ஜெயிலருடன் வெளியான சிரஞ்சீவியின் போலா சங்கர் படம் ரசிகர்களை திருப்தி படுத்தாததால் அங்கு 100க்கும் மேற்பட்ட திரையரங்குகள் ஜெயிலருக்கு கூடுதலாக கிடைத்துள்ளதாகவும், அமெரிக்காவில் விக்ரம் படத்தின் மொத்த வசூலை ஜெயிலர் படம் 3 வது நாளிலேயே முந்தி விட்டதாகவும் கூறப்படுகின்றது.
ஜெயிலர் படம் பார்த்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், இயக்குனர் நெல்சனை அழைத்து பாராட்டிய நிலையில் ஜெயிலர் படம் மாஸாக இருப்பதாக நடிகர் விஜய் பாராட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் நெல்சனுக்கு செல்போனில் அனுப்பிய குறுந்தகவலில் , வாழ்த்துக்கள் நெல்சன், சூப்பர்.. ஹேப்பி பார் யூ... என்று விஜய் குறிப்பிட்டிருந்ததாக இயக்குனர் நெல்சன் தெரிவித்தார்.
இதற்கிடையே ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன காக்கா - பருந்து கதை , விஜய்யை குறிவைத்து சொல்லப்பட்டது தானே ? என்று இயக்குனர் நெல்சனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு நெல்சன் விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினி, விஜய் ஆகிய இருவருடனும் பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன் ரஜினி யாரையும் புண்படுத்தும் நோக்கில் பேசுபவர் அல்ல, அதுவும் விஜய் மீது அவர் மிகுந்த அன்பு வைத்துள்ளார்.
அதே போல விஜய்யும், ரஜினி மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பது தனக்கு தெரியும் என்ற நெல்சன், சும்மா எதையாவது கிளப்பி விட்டுர்ராங்க, உங்க சட்டை நல்லா இருக்குன்னு சொன்ன நேற்று நீங்க போட்ட சட்டை நல்ல இல்லை என்று அர்த்தமல்ல, என்று நெல்சன் கூறினார்.