தன்னிகரற்ற நடிப்பால் சிகரம் தொட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தநாளில், அவரை நினைவுகூரும் ஒரு செய்தித்தொகுப்பு...
அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் நாடகத்தில் நடித்த சிவாஜி, பராசக்தி மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்து பேசிய வசனம் தான் இது...
தமது முதல் படமான பராசக்தியில் கலைஞர் கருணாநிதியின் வசனங்களுக்கு சிறப்பான வசன உச்சரிப்பால் உயிர் கொடுத்தவர் சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன்..
புராணப் பாத்திரங்களோ, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களோ எதையும் ஏற்று நடிப்பதில் தன்னிகரற்று விளங்கியவர் சிவாஜி. திருமால், சிவபெருமான், அப்பர், நாரதர், வீரபாகு, கர்ணன் போன்ற வேடங்கள் மிகப் பொருத்தமாக அவருக்கு அமைந்திருந்தன..
வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், பகத்சிங், கொடிகாத்த குமரன், பாரதியார் போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளை தன்னுடைய நடிப்பால் நம் கண்முன் நிறுத்திய வித்தகர் செவாலியே சிவாஜி கணேசன்..
குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியான சிவாஜி படங்கள்தான் எத்தனை எத்தனை..! தந்தையாக, அண்ணனாக, குடும்பத் தலைவனாக, நண்பனாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர் நடிகர் திலகம்...
அதிகப்படியான நடிப்பை மட்டுமல்ல, யதார்த்தமான நடிப்பையும் தன்னால் வழங்க முடியும் என்று கலை ரசிகர்களுக்கு முதல் மரியாதை கொடுத்தார் அவர்..
50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களோடு நடித்தபோதும் சரி, எண்ணற்ற இயக்குநர்கள் இயக்கியபோதும் சரி,கடைசிப் படம் வரை தனது தனித்தன்மையை தக்கவைத்துக் கொண்டவர் சிவாஜி..
தாதா காசேப் பால்கே, பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற சிவாஜி கணேசன் நடிப்புக்கு ஒரு பல்கலைக் கழகம் என்றால் அது மிகையல்ல....