மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படத்தின் சண்டைக் காட்சியில் கடலில் வாட்டர் பைக்கில் அதிவேகமாக சென்ற போது தவறி விழுந்து பலத்த காயம் அடைந்ததால் தீவிர சிகிச்சையில் உள்ள நடிகர் விஜய் ஆண்டனிக்கு 2 வதாக ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வந்தார் நடிகர் விஜய் ஆண்டனி. இசை அமைப்பாளராக இருந்து நாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்த விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வந்தது.
இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள கடல் பகுதியில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது ஜெட்ஸ்கி என்றழைக்கப்படும் வாட்டர் பைக்கை அதிவேகத்தில் விஜய் ஆண்டனி ஓட்டிச்செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் பைக்குடன் தூக்கி வீசப்பட்டார் விஜய் ஆண்டனி.
அவருக்கு நீச்சல் தெரியாது என்பதாலும், துரதிர்ஷ்டவசமாக அப்போது அவர் லைப் ஜாக்கெட் போடாததாலும், ஸ்டண்ட் கலைஞர்கள் விரைந்து சென்று அவரை காப்பாற்றுவதற்குள் நீரில் மூழ்கியதாக கூறப்படுகின்றது. பைக்கில் மோதியதால் முகத்தில் காயங்களுடன் நீரில் மூழ்கிய விஜய் ஆண்டனியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்
மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் முகத்தில் ஏற்பட்ட காயத்திற்காக 2 வது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.