வாரிசு படம் வெளியான 7 நாட்களில் உலக அளவில் 210 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக படத்தின் தமிழக வினியோகஸ்தர் லலித் டுவிட்டரில் அறிவித்துள்ள நிலையில், திருப்பூர் சுப்பிரமணியம் 200 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று கூறி உள்ளார்.
வாரிசு படம் வெளியாகி டி.வி சீரியல் போல இருப்பதாக எழுந்த விமர்சனத்தால் கொதித்துப்போன இயக்குனர் வம்சிபைடிபல்லி, வாரிசு படத்துக்காக தானும் , தளபதி விஜய்யும் செய்த தியாகங்கள் என்ன தெரியுமா ? என்னப்பா இது சீரியல்ங்றாங்க... சீரியல்ன்னா கேவலமா ? மாலை நேரங்களில் வீட்டில் போய் பாருங்க உங்க மாமா, பாட்டி எல்லாம் வீட்டில் பார்க்கிறார்கள் . டி கிரேடி பண்ணாதீங்க, சீரியலை சாதாரணமா நினைக்காதீங்கன்னு பொங்கியதால் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றார்
இதற்கிடையே வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜிடம் இருந்து குறிப்பிட்ட தொகைக்கு தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கிய தயாரிப்பாளர் லலித் என்பவர் 5 நாட்களில் வாரிசு படத்தின் வசூல் 150 கோடியை தாண்டியதாக விளம்பரம் வெளியிட்ட நிலையில், 7 நாட்களில் 210 கோடியை தாண்டியதாக விளம்பரம் வெளியிட்டு விஜய் ரசிகர்களையே இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்.
எப்போதும் விஜய் படத்திற்கு முதல் நாள் வசூல் தான் அதிகமாக இருக்கும். வாரிசு திரைப்படத்தை பொறுத்தவரை 6 மற்றும் 7 வது நாள் வசூல் அதிகரித்து இருப்பதாக விளம்பரம் வெளியிட்டு இருப்பது திரை உலகினரையே பிரமிக்க வைத்துள்ளது
இது தொடர்பாக பிரபல வினியோகஸ்தரும் , தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கேட்ட போது 200 சதவீதம் வாய்ப்பில்லை என்றார். லலித் வாங்கியது தமிழக உரிமை மட்டுமே, அதிலும் 5 முக்கிய ஏரியாக்களை ரெட் ஜெயண்டிடம் கொடுத்து விட்டார்.
மீதம் உள்ள ஏரியாக்கள் விவரம் மட்டுமே லலித்துக்கு தெரியவரலாம். அதுவும் உடனடியாக எல்லாம் தெரியாது. வெளி நாட்டு உரிமையை வேறு ஒருவர் வாங்கிச்சென்று விட்டார். அப்படி இருக்க இவருக்கு எப்படி 7 நாட்களில் உலக அளவிலான, முழுமையான வசூல் நிலவரம் தெரியவந்தது ? என்று கேள்வி எழுப்பினார்.
சிங்கிள் ரீலீஸ் என்றால் கூட பரவாயில்லை, போட்டிக்கு துணிவு படம் வந்து அதுவும் நல்லா போயிட்டு இருக்கு, இவர்கள் சொல்கிற அளவுக்கு எல்லாம் திரையரங்கு வசூல் சாத்தியமில்லை..! என்று அழுத்தமாக தெரிவித்த திருப்பூர் சுப்பிரமணியம், லலித் இந்த அளவுக்கு வசூல் விளம்பரம் வெளியிட ஒரே ஒரு காரணம் தான், விஜய்யோட அடுத்த படத்தை லலித்தான் தயாரிக்கிறார் அதான் வியாபார கணக்கு என்றார்