விக்னேஷ்சிவன் நயன்தாரா ஜோடி, தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். திருமணம் முடிந்து 4 மாதங்களில் ரெட்டை குழந்தை எப்படி பிறந்தது என்று பலரும் குழம்பி வந்த நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த ஜூன் 9ம் தேதி மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
திருமணமாகி 3 மாதங்களுக்கு மேலாக பல்வேறு நாடுகளில் ஹனிமூன் கொண்டாடி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் நயன் விக்னேஷ்சிவன் ஜோடி பகிர்ந்து வந்தது
திருமணம் முடிந்து 4மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், ஞாயிற்றுக் கிழமை, தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை வரமாக கிடைத்துள்ளதாக இரு குழந்தைகளின் கால்களுடன் படங்களை இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன், நயன்தாரா பதிவிட்டனர்
அதெப்படி திருமணம் முடிந்து 4 மாதங்களில் ரெட்டை குழந்தை ? நயன் கர்ப்பமாக இருந்த மாதிரி ஒரு புகைப்படம் கூட கண்ணில் படவில்லையே ? என்று சமூக வலைதளங்களில் விவாதம் சூடு பறக்கின்றது.
இதற்கிடையே எதையும் யோசிக்காமல் நயன்விக்கி ஜோடிக்கு வழக்கம் போல வேடிக்கை பார்ப்போர் சங்கம் சார்பாக ஒரு கூட்டம் வாழ்த்துச் சொல்லியும் வருகின்றது.
இந்த நிலையில் அந்த 2 குழந்தைகளையும் நயன்தாரா பெற்றெடுக்கவில்லை எனவும், வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி, சட்ட விதி முறைகளை பின்பற்றி வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்தார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வாடகை தாயாக இருக்கின்ற ஒரு பெண், தன் வாழ்நாளில் ஒரு முறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும். குழந்தை வேண்டுபவர்களுக்கும் வாடகை தாய்க்கும் உடல் திறன் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.
அத்தகைய சான்றிதழை, மாவட்ட சுகாதார அதிகாரிகள் வழங்க வேண்டும். மருத்துவர் பதிவு செய்யும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
வாடகைத் தாயாக வருபவருக்கு கர்ப்பம் தரிப்பதற்கு முன், பின் என மொத்தம் 16 மாத காலம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்.
வாடகைத் தாயாக நியமனமாகும் பெண்ணின் வயது 25 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பந்தப்பட்ட தம்பதி, அவர்களின் நெருங்கிய உறவுகளை மட்டுமே வாடகை தாயாக பயன் படுத்த முடியும் அப்படி பார்த்தால் வாடகை தாயாக இருந்து நயன் விக்கி ஜோடிக்கு குழந்தை பெற்றுக் கொடுத்த உறவுக்கார பெண் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் வாடகைத்தாயை நியமிக்கும் தம்பதிகளுக்கும் விதிமுறைகள் உள்ளன. வாடகைத் தாயை ஏற்பாடு செய்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி, அல்லது இருவரில் ஒருவர் குழந்தைப்பேறுக்கு தகுதியான உடல்நிலை இல்லாதவராக இருக்க வேண்டும். அப்படி என்றால் குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதியை இழந்தது யார் நயன்தாராவா ? விக்கியா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தம்பதியில் மனைவியின் வயது 23 வயதிலிருந்து 50 வயதுக்குள் இருக்க வேண்டும், கணவனின் வயது 26 வயதிலிருந்து 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தம்பதி இந்தியராகவும் திருமணமாகி ஐந்து வருடங்கள் முடிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் ஆனால் நயன் விக்கிக்கு திருமணம் முடிந்தே 4 மாதங்கள் தான் ஆகின்றது..!
தம்பதிக்கு ஏற்கனவே குழந்தை இருக்கக் கூடாது. தத்து குழந்தையோ, வாடகைத் தாய் மூலம் பெற்றுக் கொண்ட வேறு குழந்தையோ இருக்கக் கூடாது.
தம்பதிக்கு இயற்கையான முறையில் பிறந்த குழந்தை இருந்து, அந்தக் குழந்தை குணப்படுத்த முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, மனநலம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றில் குறைபாடு இருந்தாலோ, மாவட்ட மருத்துவ குழுமத்திடம் அதற்கான சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்பது அரசின் சட்ட விதியாக உள்ளது.
திருமணமாகாத நபர்களுக்கு வாடகை தாய் வைக்க அனுமதியில்லை என்பது சட்டமாக உள்ளது. அப்படி இருக்க விக்கி நயன் ஜோடி எப்படியும் 10 மாதங்களுக்கு முன்பாவது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முன் ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் அப்படி செய்திருந்தால் அதுவும் சட்ட விரோதம் தான் என்று கூறும் மருத்துவர்கள் இதனை மீறினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள சட்டத்தில் இடம் உள்ளது என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
இந்த விதிகளை எல்லாம் நயன் விக்கி ஜோடி அப்பட்டமாக மீறியுள்ளதாக சிலர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், நயன் விக்கி தரப்பில் இருந்து வாடகை தாய் குறித்து முழுமையான விளக்கம் ஏதும் வெளியிடப்பட வில்லை.