சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், தாணு உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 200 கோடி ரூபாய் அளவிற்கு, கணக்கில் வராத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2ஆம் தேதி முதல் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் 4 நாட்களாக சோதனை நடைபெற்றது. சோதனையின் போது, கணக்கில் வராத 26 கோடி ரூபாய் பணம், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகளுக்கான, பல டிஜிட்டல் ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை கூறியுள்ளது. விநியோகஸ்தர்களின் இடங்களில் கைப்பற்றிய ஆதாரங்களின் படி, திரையரங்க வசூலை குழுவாக சேர்ந்து அவர்கள் திட்டமிட்டு மறைத்ததால், உண்மையான வருமானம் மறைக்கப்பட்டதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.