நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் உலகம் முழுவதும் 117 கோடி ரூபாயை வசூலாக வாரிகுவித்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
50 கோடி ரூபாய் வசூலித்தாலே 200 கோடி ரூபாய் வசூலித்ததாக பிரமாண்ட படத்தின் விளம்பரத்திற்காக தம்பட்டம் அடிக்கும் தமிழ் திரை உலகில் லோ பட்ஜெட் படமான மாநாடு உலக அளவில் 117 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகார பூர்வமாக அறிவித்து உள்ளார்.
30கோடியே 40 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உருவான மாநாடு படத்தின் தமிழ் நாடு திரையரங்கு உரிமை 13கோடி ரூபாய்க்கு இரு விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மட்டும் மாநாடு திரைப்படம் 6 மடங்கு லாபத்துடன் 80 கோடி ரூபாயை வசூலில் வாரிக்குவித்துள்ளது. 3 கோடி ரூபாய்க்கு ஆந்திரா திரையரங்கு உரிமத்தை பெற்றவருக்கு 7 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
கர்நாடக திரையரங்கு உரிமம் 30 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் 2 கோடியே 50 லட்சம் ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. கேரளாவில் 25 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட மாநாடு திரையரங்க உரிமை 1 கோடியே 75 லட்சம் ரூபாயை வசூலித்ததாகவும், ஓவர்சீஸ் மூலம் தொடர்ந்து லாபம் பெற்றுக் கொடுத்ததாகவும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி தெரிவித்தார்.
படம் வெளியாகி 5 மாதம் கடந்து தான் விநியோகஸ்தர்களிடம் இருந்து முறையான கணக்குகள் வந்ததாகவும், இந்தாண்டு வெளியான படங்களில் தமிழ் திரையுலகை சார்ந்த அனைத்து தரப்பினருக்கும் நல்ல லாபத்தை கொடுத்த படம் என்றால் மாநாடு தான் என்று மகிழ்ச்சி தெரிவித்த சுரேஷ் காமாட்சி , 200 கோடி, 300 கோடி என பொய்யான வசூல் விவரங்களை அறிவிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்பதால் தாமதமாக அறிவிப்பதாக தெரிவித்தார்.