பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிளுக்கான 6 நிமிட முன்னோட்டத்தில் நாயகன் விஜய்யின் முகத்தை காட்டாமல் இயக்குனர் நெல்சன் திலீப் குமார், இசையமைப்பாளர் அனிருத், பாடலை எழுதிய சிவகார்த்திகேயன் என 3 பேரை மட்டும் காண்பித்ததால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் எங்க தளபதி எங்கடா.? என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வாய்ஸ் ஆல் மாஸ் ஏற்ற நினைத்து ரசிகர்களிடம் கமெண்ட் குத்து வாங்கிய மும்மூர்த்திகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் முதல் அறிமுகப்பாடலுக்கான முன்னோட்டம் வெளியாகி யூடியூப்பில் 40 லட்சத்துக்கும் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில். டாக்டர் பட பாணியில் உருவாக்கப்பட்டிருந்த சுமார் 6 நிமிடங்களுக்கு மேலான அந்த முன்னோட்ட காட்சியில் ஒரு இடத்தில் கூட படத்தின் நாயகன் விஜய்யின் போட்டோவை கூட காட்டாதது ரசிகர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கி உள்ளதாக கூறப்படுகின்றது.
இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிரூத், இந்த பாடலை எழுதும் நடிகர் சிவ கார்த்திகேயன் ஆகியோர் வழக்கம் போல கிண்டலும் கேலியுமாக விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையிலான குத்துப்பாடல் என்றும், அரபிக் குத்து என்ற முதல் சிங்கிள் குறித்து விஜய்யிடம் போனில் பேசுவதும் அதற்கு விஜய் பாடல் தனக்கு ஒன்றுமே புரியவில்லை , நேரில் வாருங்கள் என்று கலாய்ப்பதுமாக அந்த முன்னோட்டம் செல்கின்றது. விஜய்யின் குரலும் வழக்கத்துக்கு மாறான மாடுலேசனில் ஒலிக்கும் நிலையில் எங்கதளபதி எங்கடா ? என்று விஜய் ரசிகர்கள் ஆதங்கத்துடன் சமூக வலைதளங்களில் கொந்தளிப்புடன் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் முன்னோட்டம் பிரமாதமாக இருப்பதாக கூறினாலும் வருகின்ற 14 ந்தேதி வெளியாக இருக்கும் முதல் பாடலில் தங்கள் அபிமான நாயகரின் தோற்றம் வேற மாறி இருக்கும் என்று தங்களை தாங்களே கருத்துக்களால் விஜய் ரசிகர்கள் தேற்றி வருகின்றனர்.
இதற்கிடையே அரபிக் குத்து பாடலில் சில வரிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது
ஏற்கனவே சர்க்கார் படத்தில் கேட்டவுடன் புரியாத வகையில் ஒரு குத்து பாடலை உருவாக்கி விஜய் ரசிகர்களை கதற விட்ட ஏ.ஆர் ரஹ்மானுக்கு சற்றும் குறைவில்லாமல் அதே ரீதியில் இந்த அரபிக் குத்து உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில் பாடல் எப்படி இருந்தாலும் தங்கள் நாயகனின் திரை தரிசனத்துக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.