அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி உள்ள புஷ்பா படத்தில், நடிகைகள் சமந்தா நடனம் ஆட, ஆண்டிரியா பாடியுள்ள பாடல் ஆண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதாகவும், அதனைத் தடை செய்ய வேண்டும் என்றும் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் வருகிற 17 ந்தேதி வெளியாகின்றது.
இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், படத்தில் நடிகை ஆண்டிரியா பாடியுள்ள பாடல் ஒன்றுக்கு நடிகை சமந்தா நடனமாடியுள்ளார். ஓ சொல்ரியா என்று தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா ஆண்களின் பொதுப்புத்தி என்று விமர்சித்து எழுதியிருந்தார். இந்த பாடல் வெளியாகி யூடியூப்பில் முதலிடத்தில் டிரெண்டாகி வருகின்றது.
இந்த நிலையில் அந்த பாடம் ஆண் வர்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக போர்க்குரல் எழுப்பியுள்ள தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் அருள் துமிலன் இந்த பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்தி எழுதப்பட்டுள்ளதாகவும், சிறுவர் மற்றும் இளைஞர்களை மனரீதியாக பாதிக்கும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்
ஒட்டு மொத்த ஆண்களும் இப்படி தான் என்று எழுதப்பட்டுள்ள இந்த பாடலை தடை செய்யாவிட்டால் , நடனமாடிய சமந்தா, பாடிய ஆண்ட்ரியா, பாடல் எழுதியவர், இசை அமைத்தவர், இயக்குனர் என அனைவருக்கும் எதிராக வழக்கு தொடுக்க இருப்பதாக அருள் துமிலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
ஏற்கனவே ஆந்திராவில் உள்ள ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சமந்தாவின் இந்த பாடலுக்கு எதிராகவும் இதில் நடித்துள்ள சமந்தாவுக்கு எதிராகவும் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் தமிழ் நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கமும் இந்த பாடலுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி தடை செய்ய வலியுறுத்தி இருப்பது குறிப்பிடதக்கது