நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். அந்த பதிவில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கமல்ஹாசன், இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும், மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
சுவாசப் பாதை தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டுவிட் பதிவு ஒன்றில், அமெரிக்கா சென்று திரும்பிய தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதனிடையே கொரோனா தொற்று பாதித்துள்ள கமல்ஹாசன் விரைவில் நலம் பெற வாழ்த்துவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.