ஜெய்பீம் படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்தியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சந்தானம், திரைப்படத்தில் எந்த ஒரு சாதியையும் மதத்தையும் தாழ்த்தி சொல்வது சரியானது அல்ல என்றும் 2 மணி நேரம் எல்லோரும் அமர்ந்து பார்க்கும் திரைப்படத்துக்குள் ஜாதி மதத்தை புகுத்துவது தேவையில்லாதது என்று தெரிவித்துள்ளார்.
சபாபதி என்ற படத்தின் அறிமுக விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சந்தானத்திடம் ஜெய் பீம் படத்தில் குறிபிட்ட சாதியை இழிவு படுத்தும் விதமாக காட்சிப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பபட்டது. அப்போது குறுக்கிட்ட செய்தி தொடர்பாளர் நிகில் ஜெய் பீம் தொடர்பான கேள்விகளுக்கு சந்தானம் தனியாக பதில் அளிப்பார் என்று சமாளித்தார்.
ஆனால் அந்த கேள்விக்கு பதில் அளிக்க தயாராக இருந்த சந்தானம் , சினிமாவில் ஒரு தரப்பை உயர்த்தி சொல்வதோடு நிறுத்திக் கொள்ளலலாம், மற்றோரு தரப்பை தாழ்த்திக்காட்டுவது சரியானது அல்ல என்று சுட்டிக்காட்டியதோடு, 2 மணி நேரம் எந்த ஒரு பேதமுமின்றி ஒன்றாக அமர்ந்து மக்கள் ரசிக்கும் சினிமாவில் ஜாதி ,மதத்தை புகுத்துவது தேவையில்லாதது என்று கூறினார்.
ஏற்கனவே சபாபதி படத்தின் போஸ்டரில் போராளிகளை இழிவுப்படுத்துவதாக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விளக்கம் தெரிவித்த சந்தானம், ஒரு காட்சியின் புகைப்படத்தை வைத்து அதனை விமர்சிப்பது சரியாக இருக்காது என்றும் படத்தை பார்த்து விட்டு கருத்து சொல்லட்டும் என்றும் தெரிவித்தார்.