அமேசான் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படத்தை ரெஸ்டாரண்டுகளில் அகன்றதிரையில் சட்ட விரோதமாக திரையிட சூர்யா ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படம் நள்ளிரவு அமேசான் ஓடிடியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்ட சூர்யா ரசிகர்கள், ஜெய்பீம் படத்தை அகன்ற திரையில் அவிநாசியில் உள்ள மம் மம் ரெஸ்டாரண்டு அரங்கத்தில் நவம்பர் 1 ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கும், அதிகாலை 3 மணிக்கும் இரு சிறப்பு காட்சிகளாக திரையிட ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஒரு டிக்கெட் கட்டணமாக 200 ரூபாய் எனவும் இடைவேளையில் பார்வையாளர்களுக்கு காபி, டீயுடன் சில்லி சிக்கன் தரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதே போல ஈரோட்டில் நள்ளிரவு 12 மணி சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ள சூர்யா ரசிகர்கள் ஒரு டிக்கெட் கட்டணம் 100 ரூபாய் என்று தெரிவித்துள்ளனர்.
சூர்யா ரசிகர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டணத்தை தெரிவித்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கதலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் , தமிழக அரசின் சினிமாட்டோகிராப் சட்டப்படி லைசன்ஸ் பெற்ற மற்றும் சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களை மட்டுமே பொது வெளியில் திரையிட வேண்டும்.
ஆனால் தனது ரசிகர்கள் மூலம் உரிமம் இல்லாத ரெஸ்டாரண்டுகளில் ஜெய்பீம் படத்தை திரையிடும் இந்த சட்டவிரோத திரையரங்க செயல்பாட்டை தடுத்து நிறுத்த க்கோரி முதல் அமைச்சருக்கும் , சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடமும் மினஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது போன்ற செயல்களை ஊக்குவித்தால், அரசுக்கு முறையான வரிகள் செலுத்தி இயக்கப்படும் திரையரங்க தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள திருப்பூர் சுப்பிரமணியம், சமூக விரோத செயல்களை தடுப்பதில் முனைப்புக் கொண்டவராக தன்னைக் காட்டிக் கொள்ளும் சூர்யா மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சூர்யா ரசிகர்கள், ஓட்டல்களில் கிரிக்கெட் ஒளிபரப்பு செய்யப்படுவது போல சூர்யா ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக அமேசானில் பணம் கட்டி இந்த காட்சிக்கு முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.