ஈழத்தமிழ்ப் பெண்ணிடம் திருமண ஆசைகாட்டி பணம் பறித்த சம்பவத்தில் வீடியோகாலில் பேசிய ஆர்யா மற்றும் அவரது தாயை தப்பவிட்டது ஏன் ? என்று நீதிமன்றத்தில் வைத்து போலீசாரிடம் எழுப்பபட்டுள்ள கேள்வியால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆர்யாவை போல் நடித்து ஜெர்மனி நாட்டு பெண்ணிடம் பணம் பறித்ததாக கூறப்பட்ட வழக்கில், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், குற்றஞ்சாட்டப்பட்டவர் பெயரில் முதலில் சேர்க்கப்பட்ட நடிகர் ஆர்யாவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
நடிகர் ஆர்யா சமூக வலைதளம் வழியாக தன்னிடம் பழகி, திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்ச ரூபாய் பெற்று கொண்டு ஏமாற்றி விட்டதாக, ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த 10 ஆம் தேதி நடிகர் ஆர்யாவை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து கடந்த 24 ஆம் தேதி, நடிகர் ஆர்யாவை போல நடித்து ஜெர்மனி பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டதாக, புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் ஆகியோரை மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த வழக்கிற்கும் நடிகர் ஆர்யாவிற்கும் தொடர்பில்லை என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட இருவரும், ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கானது புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது, ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்ட போது, இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதில் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டு, வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து ஜெர்மனி பெண் தரப்பு வழக்கறிஞரான ஆனந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். "ஆர்யா போல் நடித்து மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இருவரும் 3வது மற்றும் 4 ஆவது குற்றவாளி என்று கூறிய அவர், முதல் குற்றவாளியான நடிகர் ஆர்யா மற்றும் இரண்டாவது குற்றவாளியான ஆர்யாவின் தாயார் ஜமீலாவின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேர்த்துள்ளதாகவும், அவர்கள் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்
ஜெர்மனி பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடிகர் ஆர்யா மீது மோசடி புகார் அளித்த நிலையில், நடிகர் ஆர்யா தன்னை போல நடித்து ஏமாற்றியதாக யார் மீதும் எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை எனவும் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் அவர் ஏன் எந்தவிதமான புகாரும் இதுவரை அளிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
ஜெர்மனி பெண்ணிடம் நடிகர் ஆர்யா வீடியோ காலில் பேசிய அனைத்து ஆதாரங்களையும் வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் கேட்டு கடிதம் எழுதி இருப்பதாகவும், நடிகர் ஆர்யா பேசிய அனைத்து மெசேஜ்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்து இருப்பதாகவும் அவர் கூறினார்.
நடிகர் ஆர்யாவின் செல்போன் எண்ணில் இருந்து ஜெர்மனி பெண்ணிடம் பேசி, நட்சத்திர அந்தஸ்தில் தான் இருப்பதால் தனது மேலாளர் முகமது அர்மான், ஹூசைனி வங்கி கணக்கில் பணத்தை பெற்ற ஆதாரங்களும் தங்களிடம் இருப்பதாக அவர் கூறினார்.
உடனடியாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்யா மீது கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கேட்ட போது புகாரின் அடிப்படையில் நடிகர் ஆர்யா, அவரது தாயார் ஜமீனா ஆகியோர் மீது முதற்கட்டமாக வழக்குபதிவு செய்ததாகவும், பின்னர் நடத்திய விசாரணையில் நடிகர் ஆர்யாவிற்கு இதில் தொடர்பில்லை என்பது தெரிய வந்ததாக தகவல் தெரிவித்தனர்.
மேலும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யும் போது ஆர்யாவின் பெயர் நீக்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் முதல் தகவல் அறிக்கையில் உள்ள நடிகர் ஆர்யா மற்றும் அவரது தாயாரின் பெயரை போலீசார் திட்டமிட்டு மறைத்தது அம்பலமாகி உள்ளதால் இந்த வழக்கில் தனக்கு உரிய நீதி கிடைக்குமா ? என்ற அய்யப்பாடு எழுந்துள்ளதாக ஈழத்து பெண் விட்ஜா வேதனை தெரிவித்துள்ளார்.