ஆர்யா பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி ஜெர்மனியை சேர்ந்த ஈழத்தமிழ் பெண்ணை காதலித்து ஏமாற்றியதோடு, 70 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அமைதிகாத்ததால் ஆர்யாவுக்கு ஏற்பட்ட அவப்பெயர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்துள்ளவர் நடிகர் ஆர்யா..!
இவர் மீது ஜெர்மணியை சேர்ந்த ஈழத்தமிழ் பெண் விட்ஜா என்பவர் அளித்த திருமண மோசடி மற்றும் பணம் பறிப்பு குறித்த புகாரை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் , அந்த பெண்ணிடம் பழகிய முக நூல் கணக்கு மற்றும் செல்போன் நம்பர் மற்றும் வங்கிகணக்கு மூலம் பணம்பறித்தது புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அர்மான், மற்றும் உசைனி ஆகியோர் என்பதை கண்டறிந்து கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது நடிகர் ஆர்யாவின் பெயரில் முக நூலில் போலியாக கணக்கு ஒன்றை தொடங்கி அதில் வலியவந்து சிக்கும் பெண்களிடம் ஆசைவார்த்தைக்கூறி பழகி பணம் பறித்து வந்துள்ளனர். அந்தவகையில் ஜெர்மணியை சேர்ந்த விட்ஜாவிடம் ஆர்யா போல பேசி பழகியதோடு, தான் பணக்கஷ்டத்தில் இருப்பதாக கூறி அவ்வபோது கொஞ்சம் கொஞ்சமாக வெஸ்டர் யூனியன் மணிடிரான்ஸ்பர் மூலமாக பணம் பறித்து வந்தது தெரியவந்துள்ளது.
இந்த மோசடி பாய்ஸ் பயன்படுத்திய செல்போனின் எண்ணை ட்ரூ காலரில் பரிசோதித்தால் ஆக்டர் ஆர்யா என்று பெயர் வரும் அளவிற்கு முன் ஏற்பாடுகளை செய்திருந்ததால் அந்த பெண்ணும் தன்னுடன் சாட்டிங் செய்வது உண்மையிலேயே நடிகர் ஆர்யா தான் என்று முழுமையாக நம்பியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த பெண்ணை ஏமாற்றி பணம் பெற்றுக் கொண்டதோடில்லாமல் நடிகை ஆயிஷாவை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாக வாட்ஸ் அப்பில் கதை அளந்து போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெற சொன்ன கூத்தும் அரங்கேறி உள்ளது.
நீண்ட நாட்களாக தன் மீதான இந்த புகார் குறித்து அலட்டிக் கொள்ளாமல் அமைதிகாத்த நடிகர் ஆர்யா, தனது படங்களுக்கு தடைகேட்டு விட்ஜாவின் வழக்கறிஞர் ஆனந்தன் நீதிமன்றத்தை நாடியதால் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்ததாகவும், அப்போது தனக்கும் அந்த பெண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லையென்றும், பணம் பெற்றவர்கள் மீது தராளமாக நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படியும் கூறிச்சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர் ஆர்யாவின் உதவியாளர் என்று கூறி வெஸ்டர்ன் யூனியன் மணிடிரான்ஸ்பர் மூலம் பணம் பெற்ற முகமது அர்மன், ஆர்யாவின் மேனேஜர் என்ற உசைனி அகிய 2 பேரையும் தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். உண்மையில் நடிகர் ஆர்யாவுக்கும் இந்த இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் ஆர்யா தொடர்ந்து அமைதிகாத்ததால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த இருவரும் இன்னும் எத்தனை பேரிடம் ஆர்யாவின் பெயரை தவறாக பயன்படுத்தி பணம் பறித்துள்ளனர் என்பது குறித்து விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ள நிலையில் ஜெர்மனி பெண்ணிடம் ஆர்யா போல வீடியோகாலில் பேசி பங்களா வீட்டை சுற்றிகாட்டியது யார் ? என்ற விவரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.