இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரியாக சுமார் 30 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை 48 மணி நேரத்தில் செலுத்த நடிகர் தனுஷுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் தனுஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரியாக சுமார் 60 லட்சத்து 60ஆயிரம் ரூபாய் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டது. அந்த தொகையில் 50 சதவீதத்தை செலுத்திய தனுஷ், பிறகு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் தான் ஒரு நடிகர் என ஏன் தனுஷ் குறிப்பிடவில்லை? என நீதிபதி கேள்வி எழுப்பினார். ஒரு சோப்பு வாங்கும் சாமானியரும், விலை ஏற்றம் காரணமாக வெறும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாமானியரும் கூட வரி செலுத்தி வருவதாக நீதிபதி கூறினார். மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டியதானே எனவும் நீதிபதி தனுஷ் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.
வரி விலக்கு கேட்டு சமான்ய மக்கள் என்ன நீதிமன்றத்தையா நாடுகிறார்களா? எனவும் நீதிபதி வினவினார். எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் சம்பாதியுங்கள், எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கள் ஆனால் அரசுக்கு செலுத்த வேண்டிய வரித் தொகையை முழுமையாக செலுத்துங்கள் எனவும் தனுஷ் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார். அதற்கு திங்கட் கிழமைக்குள் நுழைவு வரி பாக்கியை செலுத்த தயார் என தனுஷ் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
பிற்பகலில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியாக சுமார் 30 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை 48 மணி நேரத்தில் செலுத்த நடிகர் தனுஷுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் வழக்கு தொடர்ந்தவரின் விவரங்களை பதிவுத்துறை பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.